ADDED : மே 13, 2013 12:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செல்வவளம் தரும் பிரசன்ன வெங்கடாஜலபதி, திருச்சி அருகிலுள்ள குணசீலத்தில் அருள்கிறார். இவரை அட்சய திரிதியை அன்று வழிபட்டு வரலாம்.
தல வரலாறு:
திருப்பதி வெங்கடாஜலபதியை குலதெய்வமாகக் கொண்ட குணசீலர் என்ற பக்தர், காவிரிக்கரையில் இருந்த தனது ஆஸ்ரமத்திலும் அவர் எழுந்தருள வேண்டுமென விரும்பினார். இதற்காக தவமிருந்தார். குணசீலரின் வேண்டுதலின்படி அவ்விடத்தில் எழுந்தருளினார். குணசீலரின் பெயரால் அப்பகுதிக்கு 'குணசீலம்' என்ற பெயர் ஏற்பட்டது. ஒருசமயம் குணசீலரின் குரு, தால்பியர் தன்னுடன் தங்கும்படி அவரை அழைத்தார்.
குணசீலர் தன் சீடர் ஒருவரிடம், பெருமாளை ஒப்படைத்து தினமும் பூஜை செய்யும்படி சொல்லிவிட்டு சென்று விட்டார். அப்போது குணசீலம் காடாக இருந்தது. வன விலங்குகள் அந்தப்பகுதியை முற்றுகையிட்டன. பயந்துபோன சீடர் சிலையைப் போட்டு விட்டு ஓடி விட்டார். பெருமாள் சிலையை புற்று மூடிவிட்டது. ஞானவர்மன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டபோது, அரண்மனைப் பசுக்கள் இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்தன. ஒருசமயம் தொடர்ச்சியாக பாத்திரங்களில் இருந்த பால் மறைந்தது. தகவலறிந்த மன்னன் இது பற்றி விசாரிக்க வந்தான். பசுக்கள் ஒரு புற்றின் மேல் பால் சொரிவதைக் கண்டான். அப்போது ஒலித்த அசரீரி, புற்றுக்குள் சிலை இருப்பதை உணர்த்தியது. மன்னன் சிலையை கண்டெடுத்து கோயில் எழுப்பினான். 'பிரசன்ன வெங்கடாஜலபதி' எனப் பெயர் சூட்டப்பட்டது.
சிறப்பம்சம்:
கோயிலை ஒட்டி காவிரி நதியும், எதிரில் பாபவிநாச தீர்த்தமும் உள்ளது. திருப்பதியிலும் பாபாநாச தீர்த்தம் உள்ளது குறிப்பிடத்தக்கது. சுவாமியே பிரதானம் என்பதால் தாயார் சந்நிதி கிடையாது. உற்சவர் சீனிவாசர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், தங்க செங்கோலுடன் காட்சி தருகிறார். சுவாமி சந்நிதியின் இருபுறமும் உத்ராயண, தட்சிணாயண வாசல்கள் உள்ளன.
ஒவ்வொரு மாதமும் திருவோணத்தன்று சுவாமி கருடசேவை சாதிக்கிறார்.
மனக்குழப்பத்திற்கு தீர்வு:
மனக்குழப்பம் உள்ளோர், மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிவர்த்திக்காக வழிபடும் தலம் இது. காலை, மாலையில் நடக்கும் பூஜையின்போது இவர்களுக்கு தீர்த்தம் தருவர். மதியமும், இரவிலும் மனநோயாளிகளை சுவாமி சந்நிதியில் அமரச்செய்து பூஜை செய்கிறார்கள். சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை இவர்கள் முகத்தில் தெளிக்கிறார்கள்.
இதர தெய்வங்கள்:
கோயில் முகப்பிலுள்ள தீப ஸ்தம்பத்தில் ஆஞ்சநேயர் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார். கொடிமரத்தைச் சுற்றிலும் கோவர்த்தன கிருஷ்ணர், காளிங்க நர்த்தனர், நர்த்தன கண்ணன், அபயஹஸ்த கிருஷ்ணர் உள்ளனர். சுவாமி சந்நிதி கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) நவநீதகிருஷ்ணர், நரசிம்மர், வராகர், யக்ஞ நாராயணர் உள்ளனர். வைகானஸ ஆகமத்தை தோற்றுவித்த விகனஸருக்கு சந்நிதி இருக்கிறது.
திறக்கும் நேரம்:
காலை 6.30- மதியம் 12.30, மாலை 4-இரவு 8.30 .
இருப்பிடம் :
திருச்சி- சேலம் ரோட்டில் 24 கி.மீ., தூரத்தில் குணசீலம்.
போன்:
04326 275 210, 275 310.

