ADDED : செப் 01, 2016 09:54 AM

சுக்லாம்பர தரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
ப்ரஸந்ந வதநம் த்யாயேந் ஸர்வ விக்நோபசாந்தயே'
என்ற விநாயகருக்குரிய மந்திரம் கோவில்களில், திருமண நிகழ்ச்சிகளில், தர்ப்பணம் உள்ளிட்ட பிதுர் சடங்குகளில் நிச்சயமாக நம் காதில் விழுந்திருக்கும். இது விநாயகருக்குரிய மந்திரம். 'சுக்லாம் பரதரம்' என்றால் வெள்ளை உடை உடுத்தியவர். சிவன், சரஸ்வதிக்கு கூட வெள்ளை உடை தான்.
மனிதர்கள் உட்பட எல்லாருக்குமே வெள்ளை வேட்டி தான். 'விஷ்ணும்' என்றால் 'எங்கும் பரவியிருப்பவர்'. எல்லா தெய்வங்களும் இப்படி எங்கும் பரவியே இருக்கிறார்கள். 'சசிவர்ணம்' என்றால் 'பால் நிலா போல நிறம்'. இதுவும் கூட பல தெய்வங்களுக்கு பொருந்தும். 'சதுர்புஜம்' என்றால் 'நான்கு கைகள்'. அநேக தெய்வங்கள் நான்கு கைகளுடன் இருக்கிறார்கள். 'ப்ரஸந்ந வதநம்' என்றால் 'ஒளிவீசும் முகம்'. இதுவும் எல்லாருக்கும் பொருந்தும். ஆக, இதை எப்படி விநாயகர் மந்திரம் என சொல்ல முடியும் என புரியாமல் கேட்கலாம். கடைசி பதமான விக்நோப சாந்தயே' என்பதற்கு 'தடைகளை நீக்குபவர்' என்று பொருள். ஆம்...தடைகளை நீக்குபவர் விநாயகர் மட்டுமே. 'த்யாயேந்' என்றால் 'வணங்குதல்'. இனிமேல், இந்த எளிய மந்திரத்தை சொல்லி விநாயகரை வணங்கிய பின் ஒரு நிகழ்ச்சி, தொழில் அல்லது பணியைத் துவங்குங்கள்... அது வெற்றிகரமாக முடியும்.

