ADDED : ஜூலை 20, 2012 01:01 PM

ஜூலை 23 - கருடபஞ்சமி, ஜூலை 26 கருடஜெயந்தி
பெண்கள் தீர்க்க சுமங்கலி பாக்கியம் வேண்டி கருடபஞ்சமி விரதத்தை ஆவணி வளர்பிறை பஞ்சமியில் அனுஷ்டிப்பர்.
(இவ்வாண்டு பஞ்சாங்க மாற்றத்தால் ஆடியிலேயே வருகிறது) அடிக்கடி பாம்பு எதிர்ப்படுதல், கெட்ட கனவு, காரணமில்லாத பயம் போன்றவற்றால் சிரமப்படுபவர்கள் இதனை மேற்கொள்வது நல்லது. கருடன் அவதரித்த நாளே கருட பஞ்சமி. சிலர் அவரது நட்சத்திரமான சுவாதியின் அடிப்படையில், ஆடி சுவாதியன்று கருட ஜெயந்தியைக் கொண்டாடுவர்.
வேதகால மகரிஷியான கஷ்யபருக்கும், விநதைக்கும் பிறந்தவர் கருடன். தன் அன்னையின் பெயரால் 'வைநதேயன்' என இவர் அழைக்கப்பட்டார். ஒருசமயம், விநதை தன் சக்களத்திக்கு அடிமையாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அடிமைத்தளை தீர வேண்டுமானால், தேவலோகம் சென்று அமுதக்கலசத்தைக் கொண்டு வரவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார் வைநதேயனாகிய கருடன். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்று, அன்னையை விடுவித்தார். இவரது அசாத்திய வலிமை கண்ட விஷ்ணு, இவரைத் தனக்கு வாகனமாக்கிக் கொண்டார். ஸ்ரீவைகுண்டத்தில் இருந்த கிரீடாசலத்தை பூலோகத்திற்கு கொண்டு வந்து திருப்பதி ஏழுமலையை உருவாக்கியவர் கருடன். அதில் கருடனின் பெயரால் 'கருடாத்ரி' என்றொரு மலையும் உண்டு.
ராவணன் மகனான இந்திரஜித், லட்சுமணன் மீது தொடுத்த நாகபாசத்தால் கட்டுண்டு கிடந்தபோது கருடன் அவரைக் காப்பாற்றினார். திருப்பாற்கடலின் மத்தியிலுள்ள சுவேதத்தீவில் இருந்த பாற்கட்டிகளை பூலோகத்திற்கு கொண்டு வந்ததும் கருடனே! இக்கட்டியே 'சுவேதமிருத்திகை' என்னும் நாமக்கட்டியாக பயன்படுகிறது.

