நீரஜ் சோப்ராவுக்கு கவுரவம் * காமன்வெல்த் விளையாட்டில்

புதுடில்லி: காமன்வெல்த் துவக்கவிழாவில் நீரஜ் சோப்ரா, மூவர்ணக் கொடி ஏந்திச் செல்லவுள்ளார். இங்கிலாந்தின் பர்மிங்காமில் 22வது காமன்வெல்த் விளையாட்டு வரும் ஜூலை 28-ஆக. 8ல் நடக்கவுள்ளது. இந்தியா சார்பில் 108 வீரர், 107 வீராங்கனைகள் என 215 பேர் கொண்ட படை பங்கேற்க உள்ளது. 10 வகையான போட்டிகளில் களமிறங்குகின்றனர்.

இதற்கான துவக்கவிழாவில் இந்தியா சார்பில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மூவர்ணக் கொடி ஏந்திச் செல்லக் காத்திருக்கிறார். கடந்த 2018 ஜகார்த்தா ஆசிய விளையாட்டிலும் இவர் தான் தேசியக் கொடி ஏந்திச் சென்றார். இருப்பினும் 2018 ஆசிய விளையாட்டு, 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் கைப்பற்றினார்.

120 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில், தடகளத்தில் பதக்கம் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார். இவரை கவுரவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளது.

இந்திய ஒலிம்பிக் சங்க செயலர் ராஜீவ் மேத்தா கூறுகையில்,''பர்மிங்காம் காமன்வெல்த்தில் நீரஜ் சோப்ரா தேசியக் கொடி ஏந்திச் செல்ல வாய்ப்புள்ளது. துவக்கவிழாவில் இவர் பங்கேற்பதை பொறுத்து இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement