ஐந்து ‘கிராமத்தில்’ இந்திய நட்சத்திரங்கள் * காமன்வெல்த் விளையாட்டில் புது ஏற்பாடு

புதுடில்லி: காமன்வெல்த் கிராமத்தில் இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள், ஐந்து தனித்தனி இடங்களில் தங்க உள்ளனர். இங்கிலாந்தின் பர்மிங்காமில் 22வது காமன்வெல்த் விளையாட்டு வரும் ஜூலை 28-ஆக. 8ல் நடக்கவுள்ளது. 5000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்க காத்திருக்கின்றனர்.

இந்தியா சார்பில் 108 வீரர், 107 வீராங்கனைகள் என 215 பேர் கொண்ட படை பங்கேற்க உள்ளது. 16 வகையான போட்டிகளில் களமிறங்குகின்றனர். துவக்கவிழாவில் இந்தியா சார்பில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மூவர்ணக் கொடி ஏந்திச் செல்லக் காத்திருக்கிறார்.

வழக்கமாக போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் மொத்தமாக ஒரே இடத்தில் தங்குவர். இம்முறை காமன்வெல்த் கிராமம், மூன்று வெவ்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்திய நட்சத்திரங்களை ஐந்து பிரிவுகளாக பிரித்து, தனித்தனி இடங்களில் தங்கவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பர்மிங்காம் காமன்வெல்த் ஒருங்கிணைப்பு சார்பில் இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் தெரிவிக்கப்பட்டது. தவிர இங்கிலாந்து வருவதற்கு 72 மணி நேரத்துக்கு முன் அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட உள்ளது.

இந்தியாவின் நீச்சல், தடகளம், ஜிம்னாஸ்டிக்ஸ், ஸ்குவாஷ், ஹாக்கி அணியினர் பர்மிங்காம் காமன்வெல்த் கிராமத்தில் தங்குவர். பாட்மின்டன், குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், பளுதுாக்குதல், 'டிரையத்லான்' பிரிவினர் என்.இ.சி., கிராமத்தில் தங்குவர். மல்யுத்தம், ஜூடோ நட்சத்திரங்கள் வார்விக் பகுதியில் உள்ள கிராமத்தில் தங்கவுள்ளனர்.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் மட்டும் தனியாக 'சிட்டி சென்டரில்' தங்குவர். சைக்கிளிங் போட்டிகள் லண்டனில் நடக்கவுள்ளன. இதனால் இந்த வீரர், வீராங்கனைகள் 'சாட்டிலைட்' கிராமத்தில் தங்குவர்.

Advertisement