காமன்வெல்த் விளையாட்டில் தங்கம்: இந்திய பளுதுாக்குதல் வீரர் இலக்கு

புதுடில்லி: ''காமன்வெல்த் விளையாட்டு பளுதுாக்குதலில் தங்கம் வெல்ல விரும்புகிறேன்,'' என, இந்தியாவின் ஜெரிமி தெரிவித்துள்ளார். இந்திய பளுதுாக்குதல் வீரர் ஜெரிமி லால்ரின்னுங்கா 19. மிசோராம் மாநிலத்தை சேர்ந்த இவர், 2018ல் அர்ஜென்டினாவில் நடந்த யூத் ஒலிம்பிக்கில் தங்கம், உஸ்பெகிஸ்தானில் நடந்த ஆசிய யூத் மற்றும் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றார். கடந்த 2019ல் தாய்லாந்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 21வது இடம் பிடித்து ஏமாற்றிய இவர், கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானில் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கத்தை தட்டிச் சென்றார்.டோக்கியோ ஒலிம்பிக்கில் காயம் காரணமாக பங்கேற்க முடியாத ஜெரிமி, பர்மிங்காமில் நடக்கவுள்ள காமன்வெல்த் விளையாட்டில் களமிறங்க காத்திருக்கிறார். இதுகுறித்து ஜெரிமி கூறுகையில், ''காமன்வெல்த் விளையாட்டில் முதன்முறையாக பங்கேற்க இருப்பது மகிழ்ச்சி. யூத் ஒலிம்பிக் போட்டிக்கு பின், மிகப் பெரிய தொடரில் சாதிக்கவில்லை. கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்க முடியவில்லை. காமன்வெல்த் விளையாட்டில் முழுத்திறமையை வெளிப்படுத்தி தங்கம் வெல்வதே இலக்கு. இதற்காக கடினமாக பயிற்சி மேற்கொண்டுள்ளேன்,'' என்றார்.

Advertisement