மனதளவில் தொல்லை...லவ்லினா கவலை * காமன்வெல்த் பயிற்சி பாதிப்பு

பர்மிங்காம்: ''எனது பயிற்சியாளருக்கு அனுமதி மறுக்கின்றனர். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். காமன்வெல்த் விளையாட்டுக்கான பயிற்சியும் பாதிக்கப்படுகிது'' என லவ்லினா தெரிவித்தார். இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா 24. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவர். இவருக்கு சந்தியா, அமே கோலேகர் என இரண்டு பயிற்சியாளர்கள் உள்ளனர். காமன்வெல்த் விளையாட்டுக்காக இங்கிலாந்தின் பர்மிங்காம் சென்றார். காமன்வெல்த் கிராமத்தில் லவ்லினாவின் பயிற்சியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் அமே கோலேகர் நாடு திரும்ப, சந்தியா மட்டும் வேறு இடத்தில் தங்கியுள்ளார்.

இதுகுறித்து லவ்லினா கூறியது:

இன்று மிகுந்த மன வருத்தத்தில் உள்ளேன். எனக்கு தரப்படும் தொடர் தொல்லைகள் குறித்து பகிர்ந்து கொள்கிறேன். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல உதவிய எனது இரு பயிற்சியாளர்களும் புறக்கணிக்கப்படுகின்றனர். துரோணாச்சார்யா விருது வென்றவர் சந்தியா. இவரை காமன்வெல்த் குழுவில் ஒருவழியாக சேர்த்தனர். இருப்பினும் என்னுடன் தங்க அனுமதிக்கவில்லை. காமன்வெல்த் கிராமத்துக்கு வெளியில் தங்கியுள்ளார். மற்றொரு பயிற்சியாளர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

குத்துச்சண்டை துவங்க 7 நாள் மட்டும் உள்ளன. ஆனால் பயிற்சியாளர்களுக்கு தரப்படும் தொல்லைகளால் மனதளவில் துன்பத்திற்கு ஆளாகியுள்ளேன். இது எனது பயிற்சியை பாதித்துள்ளது. இவ்வளவு பிரச்னைகளை வைத்துக் கொண்டு, போட்டியில் எப்படி கவனம் செலுத்துவது எனத் தெரியவில்லை. இவர்களது அரசியலால், காமன்வெல்த் விளையாட்டில் பாதிப்பு ஏற்படுவதை விரும்பவில்லை. இவற்றை மீறி இந்தியாவுக்காக பதக்கம் வெல்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.அனுமதி எப்படி

இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு செயலர் ஹேமந்தா கூறுகையில்,' வீரர், வீராங்கனைகள் எண்ணிக்கைக்கு ஏற்ப 25 சதவீத பயிற்சியாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். குத்துச்சண்டை போட்டிக்கு பயிற்சியாளர், டாக்டர் உட்பட 4 பேர் சென்றுள்ளனர். கூடுதலாக 4 பேர் பகலில் மட்டும் காமன்வெல்த் கிராமத்தில் சென்று பயிற்சி தர அனுமதி தரப்பட்டுள்ளது. இரவில் வெளியே சென்று விடுவர். இந்திய ஒலிம்பிக் சங்கம் பிரச்னையை சரிசெய்யும் என நம்புகிறோம்,' என்றார்.இது ஒரு தொடர்கதை...

முன்னணி நட்சத்திரங்களின் தனிப்பட்ட பயிற்சியாளர்களை புறக்கணிக்கும் செயல் தொடர்கிறது. ஒலிம்பிக் உள்ளிட்ட முக்கிய போட்டிகளின் போது வீரர், வீராங்கனைகளின் தனிப்பட்ட பயிற்சியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மாறாக கோடிக்கணக்கில் செலவு செய்து, தேசிய பயிற்சியாளர்களை அனுப்புவதால், அவர்களது பயிற்சி பாதிக்கப்பட்டு, பதக்கம் பறிபோகிறது.

* டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிசில் மணிகா பத்ரா பயிற்சியாளர் சன்மேவுக்கு அனுமதி தரப்படவில்லை.

* குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல். இவரது சிறுவயது முதல் பயிற்சியாளராக உள்ள அனில் தங்கரை, டோக்கியோ ஒலிம்பிக்கில் அனுமதிக்கவில்லை.

* மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின், பயிற்சியாளர் வோலர், 'பிசியோ' பூர்ணிமா. இவர்கள் வினேஷ் போகத்துடன் ஒலிம்பிக் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

* தற்போது காமன்வெல்த் போட்டியில் லவ்லினா பயிற்சியாளர்களுக்கும் அனுமதி இல்லாமல் போனது.

Advertisement