ஊக்கமருந்து சர்ச்சையில் தனலட்சுமி * இந்திய அணியில் இருந்து நீக்கம்

புதுடில்லி: ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய தனலட்சுமி, ஜஸ்வர்யா காமன்வெல்த் விளையாட்டுக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்திய தடகள வீராங்கனை தனலட்சுமி 24. திருச்சியை சேர்ந்தவர். கேரளாவில் நடந்த இந்திய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் 200 மீ., ஓட்டத்தில் 23.21 வினாடி நேரத்தில் வந்து, ஹிமா தாசை பின்தள்ளினார்.

துருக்கியில் 100, 200 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற இவர், சென்னை தடகளத்திலும் முதலிடம் பெற்றார். கஜகஸ்தான் போட்டியில் 200 மீ., ஓட்டத்தை 22.89 வினாடி நேரத்தில் கடந்து புதிய சாதனை படைத்தார்.

தரவரிசை அடிப்படையில் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 200 மீ., ஓட்டத்தில் பங்கேற்க தகுதி பெற்றார். தவிர, காமன்வெல்த் விளையாட்டில் 100 மீ., 4*100 மீ., ஒட்டத்தில் பங்கேற்க காத்திருந்தார்

இரண்டு சோதனை

ஆனால், விசா பிரச்னை காரணமாக உலக தடகளத்துக்கு செல்லாமல் தவிர்த்த தனலட்சுமி, காமன்வெல்த் விளையாட்டில் கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்தார். தற்போது ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளார்.

கடந்த மே (துருக்கி), ஜூன் மாதம் (திருவனந்தபுரம்) போட்டி இல்லாத நாட்களில், உலக தடகளம், தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் சார்பில் தனலட்சுமியிடம் இரு சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் தடை செய்யப்பட்ட 'அனபோலிக் ஸ்டெராய்டு' ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்தது.

மற்றொரு இந்திய வீராங்கனை ஐஸ்வர்யா 24. காமன்வெல்த்தில் 'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் பங்கேற்க காத்திருந்தார். போட்டி இல்லாத நாட்களில் சோதனையை தவிர்க்க, தலைமறைவு ஆவதாக இவர் மீது ஏற்கனவே புகார் இருந்தது. இதனிடையே சென்னை தேசிய தடகளத்தில் தங்கம் வென்ற இவரிடம், ஜூன் 13, 14ல் இவரிடம் சோதனை நடந்தது.

இதில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானது. தனலட்சுமி, ஜஸ்வர்யா என இருவரும் காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டனர். தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டன.

காமன்வெல்த் 4*100 மீ., ஓட்டத்தில் ஹிமா தாஸ், டுட்டீ சந்த், ஸ்ரபானியுடன் ஜில்னா சேர்க்கப்பட்டார்.

Advertisement