காமன்வெல்த் விளையாட்டு வரலாறு

பிரிட்டிஷ் பேரரசின் ஆட்சியின் கீழ் முன்பு இருந்த உறுப்பு நாடுகளை, ஒரு விளையாட்டின் மூலம் ஒருங்கிணைக்கும் முயற்சியாகத் தான் காமன்வெல்த் விளையாட்டு உருவானது. முதன் முதலில் கனடாவின் ஹாமில்டனில் 1930ல் நடந்தது. மொத்தம் 11 நாடுகள் பங்கேற்றன. தடகளம், குத்துச்சண்டை, லான் பால், படகு வலித்தல், நீச்சல், மல்யுத்தம் என 6 போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் நீச்சல் போட்டியில் மட்டும் பெண்கள் பங்கேற்றனர். இந்தியா 1934 முதல் பங்கேற்கிறது. அனுபவ அணிகள்

ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் என, 6 அணிகள் மட்டும் இதுவரை நடந்த 21 காமன்வெல்த் விளையாட்டிலும் பங்கேற்ற பெருமை பெற்றுள்ளன.

503 பதக்கம்

காமன்வெல்த் விளையாட்டில் இதுவரை 17 முறை பங்கேற்றுள்ள இந்தியாவுக்கு 181 தங்கம், 173 வெள்ளி, 149 வெண்கலம் என, மொத்தம் 503 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதில், 2010ல் டில்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் உட்பட 101 பதக்கங்கள் கிடைத்தன.

கடந்த 2002, மான்செஸ்டர் போட்டியில் இந்தியா 69 (30 தங்கம், 22 வெள்ளி, 17 வெண்கலம்), 2018, கோல்டுகோஸ்டில் 66 பதக்கம் (26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம்) வென்றது.

ஆஸி., ஆதிக்கம்

இதுவரை நடந்த 21 காமன்வெல்த் விளையாட்டில் 932 தங்கம், 774 வெள்ளி, 709 வெண்கலம் என, 2415 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. அடுத்த இரு இடங்களில் இங்கிலாந்து (714 தங்கம், 715 வெள்ளி, 715 வெண்கலம், 2144 பதக்கம்), கனடா (484 தங்கம், 516 வெள்ளி, 555 வெண்கலம், 1555 பதக்கம்) உள்ளன.

மூன்றாவது முறை

இங்கிலாந்தின் பர்மிங்காமில், 22வது காமன்வெல்த் விளையாட்டு (ஜூலை 28 - ஆக. 8) நடக்கிறது. இது, இங்கிலாந்து மண்ணில் நடத்தப்படும் 3வது காமன்வெல்த் விளையாட்டு. இதற்கு முன், லண்டன் (1934), மான்செஸ்டர் (2002) நகரில் நடந்தன. இதன்மூலம் காமன்வெல்த் விளையாட்டை அதிக முறை நடத்திய நாடுகளுக்கான பட்டியலில் 3வது இடத்தை நியூசிலாந்து (1950, 1974, 1990), ஸ்காட்லாந்துடன் (1970, 1986, 2014) பகிர்ந்து கொண்டது. முதலிரண்டு இடங்களில் ஆஸ்திரேலியா (5 முறை), கனடா (4) உள்ளன.

ஜோதி உலா

பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுக்கான ஜோதி, கடந்த ஆண்டு செப். 29ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜிம்பாப்வே கலைஞர் லாரா நியாஹுயே தலைமையிலான குழு வடிவமைத்துள்ளது. மெழுகு வார்ப்புகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இது, செம்பு, அலுமினியம், பித்தளை உலோகங்களை குறிக்கும் பதக்கங்களையும், ராணியின் பிளாட்டினம் விழாவை கொண்டாடும் வகையில் பிளாட்டின துண்டுகளையும் உள்ளடக்கியது. தவிர இதில், 360 டிகிரி கேமரா, இருதய துடிப்பு மானிட்டருடன் இணைக்கப்பட்ட எல்.இ.டி., லைட்டிங் சிஸ்டம், சுற்றுச்சூழல் நிலைமைகளை பதிவு செய்வதற்கான சென்சார்கள் இடம் பெற்றுள்ளன. இவை, ஜோதி ஓட்டத்தின் போது, பர்மிங்காம் பல்கலை., குழுவால் பகுப்பாய்வு செய்யப்படும்.இதற்கான ஜோதி ஓட்டத்தை பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், அக். 7, 2021ல் லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் துவக்கி வைத்தார். இந்த ஜோதி ஓட்டம் 72 காமன்வெல்த் நாடுகளில், 294 நாட்கள் பயணம் செய்து, இன்று காமன்வெல்த் விளையாட்டு துவக்க விழா நிகழ்ச்சிக்கு கொண்டு வரப்படும்.Advertisement