பைனலில் இந்திய பெண்கள்: காமன்வெல்த் கிரிக்கெட்டில் அசத்தல்

பர்மிங்காம்: காமன்வெல்த் கிரிக்கெட் பைனலுக்கு இந்திய பெண்கள் அணி முன்னேறியது. காமன்வெல்த்தில் முதன் முறையாக பெண்கள் 'டி-20' கிரிக்கெட் அறிமுகம் ஆனது. இதன் அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.

'டாஸ்' வென்ற இந்தியா பேட்டிங் செய்தது. ஸ்மிருதி மந்தனா 23வது பந்தில் அரைசதம் எட்டினார். இது இவரது அதிவேக அரைசதம். மந்தனா 32 பந்தில் 61 ரன் விளாசினார். ஷபாலி (15), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (20), தீப்தி (22) சற்று கைகொடுத்தனர். முதல் 6 ஓவரில் 64 ரன் எடுத்த இந்தியா, கடைசியில் 20 ஓவரில் 164/5 ரன் மட்டும் எடுத்தது. ஜெமிமா (44) அவுட்டாகாமல் இருந்தார்.ஸ்னே அபாரம்: இங்கிலாந்து அணிக்கு அலைஸ் (13), வயாத் (35) விரைவில் கிளம்பினர். 16 ஓவரில் 132/3 ரன் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. கடைசி 24 பந்தில் 33 ரன் மட்டும் தேவைப்பட்டன. இந்நிலையில் அமி (31), கேப்டன் ஷிவர் (41) என இருவரும் ரன் அவுட்டாக, திருப்பம் ஏற்பட்டது. இங்கிலாந்து வெற்றிக்கு கடைசி ஓவரில் 14 ரன் தேவைப்பட்டன. துல்லியமாக பந்துவீசிய ஸ்னே ரானா, 9 ரன் மட்டும் விட்டுக் கொடுத்தார். இங்கிலாந்து அணி 20 ஓவரில் 160/6 ரன் மட்டும் எடுத்தது. இந்திய அணி 4 ரன்னில் 'திரில்' வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.Advertisement