ரவி குமார்–வினேஷ்–நவீன் ‘தங்கம்’: காமன்வெல்த் மல்யுத்தப் போட்டியில்

பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் ரவி குமார், வினேஷ் போகத், நவீன் தங்கம் வென்றனர். இங்கிலாந்தின் பர்மிங்காமில், காமன்வெல்த் விளையாட்டு 22வது சீசன் நடக்கிறது. இதில் ஆண்களுக்கான மல்யுத்தம் 'பிரீஸ்டைல்' 57 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ரவி குமார், நைஜீரியாவின் எபிகேவெனிமோ வெல்சன் மோதினர். அபாரமாக ஆடிய ரவி குமார் 10-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இவர், காமன்வெல்த் விளையாட்டில் தனது முதல் பதக்கம் பெற்றார்.வினேஷ் 'ஹாட்ரிக்': பெண்களுக்கான 53 கிலோ பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் பங்கேற்றார். 'நார்டிக் ரவுண்டு ராபின்' முறையில் நடந்த முதல் லீக் போட்டியில் கனடாவின் சமந்தா லீக் ஸ்டீவர்ட்டை (2-0) வீழ்த்திய வினேஷ், 2வது போட்டியில் நைஜீரியாவின் மெர்சியை (6-0) வென்றார். மூன்றாவது போட்டியில் இலங்கையின் சமோத்யாவை 4-0 என 'நாக்-அவுட்' முறையில் வீழ்த்திய வினேஷ் போகத், தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் காமன்வெல்த் விளையாட்டில் 'ஹாட்ரிக்' தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். ஏற்கனவே இவர் 2014, 2018ல் தங்கம் வென்றிருந்தார்.நவீன் தங்கம்: ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' 74 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் நவீன் மாலிக் சிஹாக், பாகிஸ்தானின் முகமது ஷரிப் தாகிரை சந்தித்தார். அபாரமாக ஆடிய நவீன் 9-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த 6வது தங்கமானது.

பூஜா 'வெண்கலம்': பெண்களுக்கான 50 கிலோ பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் பூஜா கெலாட், ஸ்காட்லாந்தின் கிறிஸ்டெல் லெமோபேக் லெட்சிஜியோவை சந்தித்தார். அபாரமாக ஆடிய பூஜா கெலாட் 12-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றார்.* பெண்களுக்கான 76 கிலோ வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் பூஜா சிஹாக், ஆஸ்திரேலியாவின் நவோமி டி புரூயின் மோதினர். அபாரமாக ஆடிய பூஜா சிஹாக் 11-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.தீபக் வெண்கலம்: ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' 97 கிலோ பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் தீபக் நெஹ்ரா, பாகிஸ்தானின் தயாப் ராசா மோதினர். இதில் தீபக் 10-2 என வெற்றி பெற்று வெண்கலம் கைப்பற்றினார்.இம்முறை மல்யுத்த போட்டியில் பங்கேற்ற 12 இந்திய நட்சத்திரங்களும் (6 தங்கம், ஒரு வெள்ளி, 5 வெண்கலம்) பதக்கம் வென்றனர்.Advertisement