காமன்வெல்த் ‘டிரிபிள் ஜம்ப்’: இந்தியாவுக்கு இரண்டு பதக்கம்

பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டு 'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் இந்தியாவின் எல்தோஸ் பால், அப்துல்லா அபூபக்கர் முறையே தங்கம், வெள்ளி வென்றனர். பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டு ஆண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' பைனலில் இந்தியா சார்பில் பிரவீன் சித்ரவேல், எல்தோஸ் பால், அப்துல்லா அபூபக்கர் பங்கேற்றனர். இதில் அதிகபட்சமாக 17.03 மீ., தாண்டிய எல்தோஸ், முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். எல்தோஸை விட 0.01 மீ., குறைவாக தாண்டிய இந்தியாவின் அப்துல்லா அபூபக்கர் (17.02 மீ.,) 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் காமன்வெல்த் விளையாட்டு 'டிரிபிள் ஜம்ப்' வரலாற்றில் முதன்முறையாக ஒரு சீசனில் இரண்டு இந்திய வீரர்கள் பதக்கம் வென்றனர். இதற்கு முன் மோகிந்தர் சிங் கில் (1970ல் வெண்கலம், 1974ல் வெள்ளி), ரஞ்சித் (2010ல் வெண்லகம்), அர்பிந்தர் சிங் (2014ல் வெண்கலம்) பதக்கம் வென்றிருந்தனர்.மற்றொரு இந்திய வீரர் பிரவீன் சித்ரவேல் 16.89 மீ., தாண்டி, 0.03 மீ., வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கத்தை நழுவவிட்டார். பெர்முடாவின் பெரின்சீப் (16.92 மீ.,) வெண்கலம் வென்றார்.சந்தீப் 'வெண்கலம்'

ஆண்களுக்கான 10,000 மீ., (10 கி.மீ.,) நடை போட்டியில் இந்தியா சார்பில் அமித், சந்தீப் குமார் பங்கேற்றனர். பந்தய துாரத்தை 38 நிமிடம், 49.21 வினாடியில் கடந்த இந்தியாவின் சந்தீப் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரர் அமித் காட்ரி, இலக்கை 43 நிமிடம், 04.97 வினாடியில் அடைந்து 9வது இடம் பிடித்தார்.அன்னு 'வெண்கலம்'

பெண்களுக்கான ஈட்டி எறிதல் பைனலில் இந்தியா சார்பில் ஷில்பா ராணி, அன்னு ராணி பங்கேற்றனர். இதில் அதிகபட்சமாக 60.00 மீ., எறிந்த இந்தியாவின் அன்னு ராணி, 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இதன்மூலம் காமன்வெல்த் விளையாட்டு ஈட்டி எறிதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையானார். இதற்கு முன் இந்திய ஈட்டி எறிதல் வீரர்களான காஷிநாத் நாயக் (2010ல் வெண்கலம்), நீரஜ் சோப்ரா (2018ல் தங்கம்) பதக்கம் வென்றிருந்தனர். மற்றொரு இந்திய வீராங்கனை ஷில்பா, 54.62 மீ., எறிந்து 7வது இடம் பிடித்து ஏமாற்றினார்.இந்திய அணி 5வது இடம்

பெண்களுக்கான 4*100 மீ., 'ரிலே' ஓட்டத்தின் பைனலில் டுட்டீ சந்த், ஹிமா தாஸ், ஸ்ரபானி, ஜோதி அடங்கிய இந்திய அணி களமிறங்கியது. பந்தய துாரத்தை 43.81 வினாடியில் கடந்து 5வது இடம் பிடித்தது. முதல் மூன்று இடங்களை முறையே நைஜீரியா, இங்கிலாந்து, ஜமைக்கா அணிகள் கைப்பற்றின.Advertisement