பைனலில் சிந்து: ஸ்ரீகாந்த் ‘வெண்கலம்’

பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டு பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் சிந்து, லக்சயா சென் முன்னேறினர். மற்றொரு இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெண்கலம் வென்றார். பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டு பெண்களுக்கான பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சிந்து, சிங்கப்பூரின் ஜியா மின் யோவ் மோதினர். சிந்து 21-19, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தார்.* ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் லக்சயா சென், சிங்கப்பூரின் ஜியா ஹெங் தே மோதினர். அசத்தலாக ஆடிய லக்சயா 21-10, 18-21, 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தாார்.ஸ்ரீகாந்த் வெண்கலம்

மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், மலேசியாவின் டிஜி யோங் மோதினர். இதில் ஏமாற்றிய ஸ்ரீகாந்த் 21-13, 19-21, 10-21 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். அடுத்து நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஸ்ரீகாந்த், சிங்கப்பூரின் ஜியா ஹெங் தே மோதினர். அபாரமாக ஆடிய ஸ்ரீகாந்த் 21-15, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றார்.* ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-6, 21-15 என்ற நேர் செட் கணக்கில் மலேசியாவின் பெங் சூன் சான், கியான் மெங் டான் ஜோடியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது.* பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த், திரீசா ஜோடி 13-21, 16-21 என, மலேசியாவின் டான் கூங் லி பியர்லி, தினா முரளிதரன் ஜோடியிடம் தோல்வியடைந்தது.ஸ்குவாஷ்: இந்திய ஜோடி வெண்கலம்

ஸ்குவாஷ், கலப்பு இரட்டையர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லீகல், சவுரவ் கோஷல் ஜோடி, ஆஸ்திரேலியாவின் டோனா, கேமிரான் பில்லி ஜோடியை சந்தித்தது. அபாரமாக ஆடிய இந்திய ஜோடி 11-8, 11-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றது. இது, இம்முறை இந்தியா கைப்பற்றிய 50வது பதக்கமானது.Advertisement