ஹாக்கி: இந்தியா வெள்ளி * ஆஸி.,யிடம் வீழ்ந்தது

பர்மிங்காம்: காமன்வெல்த் ஹாக்கி பைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்திய ஆண்கள் அணி, வெள்ளிப்பதக்கம் மட்டும் பெற்றது. காமன்வெல்த் ஆண்கள் ஹாக்கி பைனலில் நேற்று இந்தியா, ஆஸ்திரேலியா மோதின. 'பெனால்டி கார்னர்' வாங்கி கோல் அடிப்பதில் வல்லவர்களான ஆஸ்திரேலிய வீரர்கள், நேற்றும் இதைத் தொடர்ந்தனர். போட்டி துவங்கிய முதல் 10 நிமிடத்திற்குள் இந்தியா 3 'பெனால்டி கார்னர்' வாய்ப்புகளை விட்டுக் கொடுத்தது.

வாய்ப்பை பயன்படுத்திய பிளேக், (9வது நிமிடம்) முதல் கோல் அடித்தார். 14வது நிமிடம் நாதன் ஒரு கோல் அடிக்க, இந்தியா 0-2 என பின்தங்கியது. 22, 27வது நிமிடம் ஜேக்கப் 2 கோல் அடித்தார். 26வது நிமிடம் டாம் தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். முதல் பாதியில் இந்திய அணி 0-5 என்ற நிலைக்கு சென்றது. தொடர்ந்து கோல் மழை பொழிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, இந்தியா தரப்பில் ஆறுதல் கோல் கூட அடிக்கமுடியவில்லை. முடிவில் இந்திய அணி 0-7 என்ற கோல் கணக்கில் தோற்று, வெள்ளிப்பதக்கம் பெற்றது. காமன்வெல்த் வரலாற்றில் ஆஸ்திரேலியா 7வது முறையாக தங்கம் வென்றது.

* காமன்வெல்த் ஹாக்கி பைனலில் இந்திய ஆண்கள் அணி, ஆஸ்திரேலியாவிடம் தோற்றது மூன்றாவது முறையாக நேற்று நடந்தது. இதற்கு முன் 2010, 2014 பைனலில் வீழ்ந்தது. தவிர காமன்வெல்த் வரலாற்றில் ஆஸ்திரேலியாவிடம் மோதிய 6 போட்டிகளிலும் இந்தியா தோல்வியை பதிவு செய்தது.

Advertisement