மூன்றாவது தங்கம் வென்றார் சரத்கமல் * பர்மிங்காம் காமன்வெல்த்தில்...

பர்மிங்காம்: பர்மிங்காம் காமன்வெல்த்தில் மூன்றாவது தங்கம் வென்றார் அஜந்தா சரத்கமல். டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் தமிழக வீரர் அஜந்தா சரத்கமல், இங்கிலாந்தின் லியாம் பிட்ச் போர்டை சந்தித்தார். முதல் செட்டை சரத்கமல் 11-13 என போராடி இழந்தார். பின் எழுச்சி பெற்ற இவர் அடுத்த இரு செட்டை 11-7, 11-2 என கைப்பற்றினார். நான்காவது செட்டையும் 11-6 என வென்ற சரத்கமல் 3-1 என முந்தினார்.

ஐந்தாவது செட்டில் அசத்திய இவர் 11-8 என வசப்படுத்தினார். முடிவில் சரத்கமல் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார். 2006க்குப் பின் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று சாதித்தார் சரத்கமல்.

* இரட்டையரில் அசத்தல்

கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அஜந்தா சரத்கமல், ஸ்ரீஜா ஜோடி, மலேசியாவின் ஜாவென், கரேன் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 11-4 என கைப்பற்றிய இந்திய ஜோடி, அடுத்த செட்டை 9-11 என இழந்தது. பின் சுதாரித்துக் கொண்ட இந்திய ஜோடி அடுத்த இரு செட்டுகளை 11-5, 11-6 என வென்றது. முடிவில் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றியது.

பர்மிங்காம் காமன்வெல்த்தில் சரத்கமல் வென்ற மூன்றாவது தங்கம் இது. இதற்கு முன் அணிகளுக்கான போட்டியில் தங்கம் வென்றார். தவிர ஆண்கள் இரட்டையரில் சத்யனுடன் இணைந்து வெள்ளி என, இம்முறை சரத்கமல் 4 பதக்கம் வென்றார். ஒட்டுமொத்தமாக காமன்வெல்த்தில் 13 பதக்கம் பெற்றார்.* சத்யன் வெண்கலம்

ஆண்கள் ஒற்றையர் பிரிவு வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் சத்யன், டிரிங்க்ஹாலை சந்தித்தார். முதல் மூன்று செட்டை சத்யன் 11-8, 11-3, 11-5 என எளிதாக கைப்பற்றினார். திடீரென ஏமாற்றிய சத்யன், அடுத்த மூன்று செட்டுகளையும் 8-11, 9-11, 10-12 என பறி கொடுக்க, பரபரப்பு ஏற்பட்டது.

வெற்றியாளரை முடிவு செய்யும் கடைசி, 7வது செட்டை சத்யன், 11-9 என வசப்படுத்தினார். முடிவில் சத்யன் 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

Advertisement