‘பொன் மகள்’ சிந்து * காமன்வெல்த் பாட்மின்டனில் தங்கம்

பர்மிங்காம்: காமன்வெல்த் பாட்மின்டனில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதன் முறையாக தங்கம் வென்றார் சிந்து. ஆண்கள் ஒற்றையரில் இந்திய இளம் வீரர் லக்சயா சென் தங்கம் கைப்பற்றி அசத்தினார். இங்கிலாந்தில் 22வது காமன்வெல்த் விளையாட்டு பர்மிங்காமில் நடந்தது. பெண்கள் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சிந்து, கனடாவின் மிட்செல்லி யை சந்தித்தார். துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய சிந்து, முதல் செட்டை 21-15 என கைப்பற்றினார். தொடர்ந்து மிரட்டிய சிந்து, அடுத்த செட்டை 21-13 என எளிதாக வசப்படுத்தினார்.

முடிவில் சிந்து 21-15, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். தனிநபர் பிரிவில் 2014ல் வெண்கலம், 2018ல் வெள்ளி வென்ற சிந்து, தற்போது 2022ல் தங்கம் கைப்பற்றினார். காமன்வெல்த் வரலாற்றில் செய்னா நேவலுக்குப் பின் (2010, 2018) தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை ஆனார்.

நான்காவது வீரர்

ஆண்கள் ஒற்றையர் பைனலில் இந்திய இளம் வீரர் லக்சயா சென் 20, மலேசியாவின் டிஜி யோங்கை எதிர்கொண்டார். இழுபறியாக இருந்த முதல் செட்டை லக்சயா 19-21 என இழந்தார். பின் சுதாரித்துக் கொண்ட இவர், இரண்டாவது செட்டில் துவக்கத்தில் இருந்து முன்னிலை பெற்றார். முடிவில் லக்சயா 21-9 என எளிதாக கைப்பற்றினார்.

வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த மூன்றாவது, கடைசி செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய லக்சயா, 21-16 என வசப்படுத்தினார். முடிவில் லக்சயா 19-21, 21-9, 21-16 என வெற்றி பெற்று, காமன்வெல்த் பாட்மின்டனில் முதன் முறையாக தங்கப்பதக்கம் பெற்றார். பிரகாஷ் படுகோன் (1978), சையது மோடி (1982), காஷ்யப்பிற்கு (2014) பின் காமன்வெல்த்தில் தங்கம் வென்ற வீரர் ஆனார் லக்சயா.

சாத்வித்-சிராக் கலக்கல்

பாட்மின்டன் ஆண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, இங்கிலாந்தின் பென் லேன், சீன் லெண்டி ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை இந்தியா ஜோடி 21-15 என கைப்பற்றியது. தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட இந்திய ஜோடி அடுத்த செட்டையும் 21-13 என எளிதாக வசப்படுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 21-15, 21-13 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றியது.

காமன்வெல்த் பாட்மின்டன் ஆண்கள் இரட்டையரில் இந்தியா தங்கம் வென்றது இது தான் முதன் முறை.

ஸ்ரீகாந்த் 'வெண்கலம்'

பாட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சிங்கப்பூரின் ஜேசன் ஹெங்கை சந்தித்தார். முதல் செட்டை 21-9 என எளிதாக வசப்படுத்தினார் ஸ்ரீகாந்த். அடுத்த செட்டை சற்று போராட்டத்துக்குப் பின் 21-18 என வென்றார். முடிவில் ஸ்ரீகாந்த் 21-9, 21-18 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

* பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் காயத்ரி, திரீஷா ஜோடி வெண்கலம் கைப்பற்றியது.

சாகர் 'வெள்ளி'

ஆண்களுக்கான குத்துச்சண்டை 92 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் சாகர், இங்கிலாந்தின் டெலிசியஸ் ஓரியே மோதினர். ஓரியே விட்ட சரமாரி தாக்குதலை சாகரால் தாக்குப் பிடிக்கமுடியவில்லை. முடிவில் 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்து, வெள்ளிப்பதக்கம் பெற்றார். பர்மிங்காம் குத்துச்சண்டையில் இந்தியா வென்ற 7 வது பதக்கமாக (3 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம்) அமைந்தது.

சத்யன் வெண்கலம்

ஆண்கள் ஒற்றையர் பிரிவு வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் சத்யன், டிரிங்க்ஹாலை சந்தித்தார். முதல் மூன்று செட்டை சத்யன் 11-8, 11-3, 11-5 என எளிதாக கைப்பற்றினார். திடீரென ஏமாற்றிய சத்யன், அடுத்த மூன்று செட்டுகளையும் 8-11, 9-11, 10-12 என பறி கொடுக்க, பரபரப்பு ஏற்பட்டது.

வெற்றியாளரை முடிவு செய்யும் கடைசி, 7வது செட்டை சத்யன், 11-9 என வசப்படுத்தினார். முடிவில் சத்யன் 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

Advertisement