ஒலிம்பிக் கனவில் சரத் கமல்: பதக்கம் வெல்ல சபதம்

புதுடில்லி: ''பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே அடுத்த இலக்கு'' என சரத் கமல் தெரிவித்தார். இங்கிலாந்தின் பர்மிங்காமில் 22வது காமன்வெல்த் விளையாட்டு நடந்தது. இதில் அசத்திய இந்தியா, 61 பதக்கங்களுடன் (22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம்) நான்காவது இடம் பிடித்தது. டேபிள் டென்னிசில் ஜொலித்த சரத் கமல், மூன்று தங்கம் உட்பட நான்கு பதக்கம் வென்றார்.தொடரும் ஆதிக்கம்: தமிழகத்தை சேர்ந்த இவரது சாதனை பயணத்திற்கு வயது தடை இல்லை. 20 ஆண்டுகளாக கொடி கட்டிப் பறக்கிறார். காமன்வெல்த் வரலாற்றில் 13 பதக்கம், ஆசிய விளையாட்டில்(2018) இரண்டு வெண்கலம் வென்றுள்ளார். 40 வயதான போதும், நல்ல உடற்தகுதியுடன் உள்ளார். அடுத்து ஒலிம்பிக்கில் சாதிக்க காத்திருக்கும் இவர், ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என தெரிவித்துள்ளார்.இது குறித்து சரத் கமல் கூறியது: பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டில், நான்கு பதக்கம் வென்றது எனது சிறந்த செயல்பாடாக அமைந்தது. தற்போது இளைஞர்கள் துடிப்பாக விளையாடுகின்றனர். இவர்களுக்கு சவால் கொடுக்க வேண்டுமானால், நல்ல உடற்தகுதியுடன் இருப்பது அவசியம். இதற்காக உடலையும் மனதையும் வலிமையாக வைத்திருக்க முயற்சிக்கிறேன்.சர்வதேச போட்டிகளில் இன்னும் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற தாகம் உள்ளது. முதலில் காமன்வெல்த் அளவில் சாதித்தோம். பின் ஆசிய அளவில் ஆதிக்கத்தை நிலைநாட்டினோம். அடுத்து ஒலிம்பிக்கில் முத்திரை பதிக்க விரும்புகிறோம். 2024ல் பாரிசில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில், டேபிள் டென்னிஸ் அணிகளுக்கான பிரிவில் இந்தியா தகுதி பெறலாம். இதில் பதக்கம் வெல்ல காத்திருக்கிறேன்.தங்கமான தருணம்: மெல்போர்ன் காமன்வெல்த்(2006) போட்டியின் ஒற்றையர் பிரிவில் முதன்முதலில் தங்கம் வென்றேன். இடையில் வெள்ளி, வெண்கலம் தான் பெற முடிந்தது. நீண்ட காலத்திற்கு பின் பர்மிங்காமில் தான் தங்கம் வென்றேன். இரண்டையும் ஒப்பிட முடியாது. ஏனெனில் 2006ல் இளம் வீரராக இருந்தேன். என் மீது எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை. இம்முறை அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் தங்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.முன்பு சர்வதேச டேபிள் டென்னிஸ் 'ரேங்கிங்' பட்டியலில் பின்தங்கியிருந்தோம். நான் 130வது இடத்தில் இருந்தேன். தற்போது முன்னேறி இருக்கிறோம். நான் 38வது இடத்தில் இருக்கிறேன். மற்றொரு தமிழக வீரர் சத்யன் 36வது இடத்தில் இருக்கிறார். எங்களது சிறப்பான செயல்பாட்டின் மூலம் இளம் தலைமுறைக்கு ஊக்கம் அளித்துள்ளோம். இந்தியாவில் டேபிள் டென்னிஸ் போட்டியும் நன்கு பிரபலமடைந்துள்ளது.இவ்வாறு சரத் கமல் கூறினார்.

Advertisement