/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
ஊராட்சி அலுவலக கட்டட பணி திருவங்கரணையில் மீண்டும் துவக்கம்
/
ஊராட்சி அலுவலக கட்டட பணி திருவங்கரணையில் மீண்டும் துவக்கம்
ஊராட்சி அலுவலக கட்டட பணி திருவங்கரணையில் மீண்டும் துவக்கம்
ஊராட்சி அலுவலக கட்டட பணி திருவங்கரணையில் மீண்டும் துவக்கம்
PUBLISHED ON : டிச 01, 2025 02:56 AM

வாலாஜாபாத்: திருவங்கரணையில், நான்கு மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு இருந்த ஊராட்சி அலுவலகத்திற்கான புதிய கட்டடப் பணி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.
வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது திருவங்கரணை ஊராட்சி. இந்த ஊராட்சி அலுவலகம், பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடத்தில் இயங்கி வந்தது.
அக்கட்டடம் மிகவும் பழுதடைந்து பயன்பாட்டிற்கு லாயக்கற்றதாக இருந்தது. மழைக்காலத்தில் தளத்தின் வழியாக நீர் சொட்டும் நிலை ஏற்பட்டது. இதனால், ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் ஏற்படுத்த ஊராட்சி சார்பில் தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சில மாதங்களுக்கு முன் அலுவலக கட்டடத்திற்கான அடித்தளம் அமைக்கும் பணி துவங்கப்பட்டது.
இதனிடையே, அக்கட்டடம் கட்டப்படும் இடம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் நான்கு மாதங்களாக பணி கிடப்பில் போடப்பட்டது.
பணியை தொடர்ந்து செய்து விரைவாக முடிக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையின் பேரில், திருவங்கரணையில், ஊராட்சி அலுவலகத்திற்கான புதிய கட்டடப் பணி தற்போது மீண்டும் துவங்கி நடைபெறுகிறது.

