PUBLISHED ON : ஜூலை 02, 2026 01:04 AM

ஜூலை 2, 1958
கோவை மாவட்டம், கோதவாடி கிராமத்தில், துவக்க பள்ளி ஆசிரியர் மயில்சாமி - பாலசரஸ்வதி தம்பதியின் மகனாக, 1958ல் இதே நாளில் பிறந்தவர் மயில்சாமி அண்ணாதுரை.
கோதவாடி அரசு பள்ளியில் படித்த வர், கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரி, பி.எஸ்.ஜி., கல்லுாரியில் இன்ஜினியரிங் படிப்பையும், சென்னை அண்ணா பல்கலையில் பிஎச்.டி., படிப்பையும் முடித்தார்.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான, 'இஸ்ரோ'வில் சேர்ந்து, இயக்குநராக உயர்ந்தார். விண்வெளி துறை, வெளிநாட்டு தொழில்நுட்பங்களை சார்ந்திருந்த நிலையில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில், 30க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை உருவாக்கி, ஏவுவதில் துணை நின்றார்.
நிலவுக்கு சந்திரயான் - 1, செவ்வாய்க்கு மங்கள்யான் ஆகிய செயற்கைக்கோள் திட்டங்களை வடிவமைத்தார். தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்ற தலைவர், தமிழக அறிவியல் தொழில்நுட்ப மன்ற துணை தலைவர், பள்ளிக்கல்வி துறை பாடத்திட்டக்குழு தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகிக்கிறார்.
'கையருகே நிலா, சிறகை விரிக்கும் மங்கள்யான், இந்தியா 75' உள்ளிட்ட நுால்களை எழுதியுள்ள இவர், பல சர்வதேச விருதுகளுடன், 'பத்மஸ்ரீ' விருதும் பெற்றுள்ளார்.
இவரது 68வது பிறந்த தினம் இன்று!
