/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
நாட்டுக்கோழி வளர்ப்பில் நல்ல லாபம்!:எங்களின் 'ஹாட் இட்லி' கடை ரொம்ப பிரபலம்!
/
நாட்டுக்கோழி வளர்ப்பில் நல்ல லாபம்!:எங்களின் 'ஹாட் இட்லி' கடை ரொம்ப பிரபலம்!
நாட்டுக்கோழி வளர்ப்பில் நல்ல லாபம்!:எங்களின் 'ஹாட் இட்லி' கடை ரொம்ப பிரபலம்!
நாட்டுக்கோழி வளர்ப்பில் நல்ல லாபம்!:எங்களின் 'ஹாட் இட்லி' கடை ரொம்ப பிரபலம்!
PUBLISHED ON : டிச 07, 2025 03:23 AM

நாட்டுக்கோழிகள் வளர்த்து லாபம் ஈட்டும், சேலம் மாவட்டம், மாட்டுக்காரன்புதுார் கிராமத்தை சேர்ந்த, செல்வகணபதி: என் அப்பா, தன் பண்ணையில், 10 மாடுகள், 10 கோழிகளை வளர்த்து வந்தார். அதில் கிடைத்த வருமானம், எங்கள் குடும்ப செலவுக்கு போதுமானதாக இல்லை. அதனால், கட்டட தொழிலாளி வேலைக்கு சென்றேன். 2014ல் எனக்கு திருமணம் ஆனது.
'வீட்டு வருமானத்தை பெருக்க, இப்போது இருக்கும் கோழிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால், வருமானம் கூடும்'னு சொல்லி, 50 நாட்டுக்கோழிகளை வளர்த்தார், என் மனைவி.
கட்டுமான பணிக்கு செல்வதை நிறுத்தி, பெரிய அளவில் நாட்டுக்கோழி பண்ணையை துவங்கி, முழு நேர தொழிலாக செய்ய முடிவெடுத்தேன். கால்நடை மருத்துவர்கள் மற்றும் நாட்டுக்கோழி பண்ணையாளர்களிடம் ஆலோசனை கேட்டு, கோழிகளை வளர்த்தேன்.
மேய்ச்சல் முறையில் வளர்ப்பது, சத்தான தீவனம் மற்றும் பண்ணையை சுகாதாரமாக பராமரிப்பதால், கோழிகள் ஆரோக்கியமாக இங்கு வளர்கின்றன. ஆண்டு முழுதும் நிரந்தரமாக, 200 தாய் கோழிகள், 50 சேவல்களை பராமரிக்கிறேன்.
தாய் கோழிகள் வாயிலாக, மாதம், 750 முதல், 900 முட்டைகள் கிடைக்கின்றன. குறைந்தபட்சம், 750 முட்டைகள் என வைத்து கொண்டாலும், 100 முட்டைகளை, எங்களின் வீட்டு தேவைக்கு பயன்படுத்தி கொள்வேன்.
மீதி முட்டை களை, 'இன்குபேட்டர்' எனும், அடை காக்கும் கருவியில் வைத்து, குஞ்சுகள் பொரிப்பேன்; 500 குஞ்சுகள் கிடைக்கும்.
இதில், 400 கோழிக் குஞ்சுகளை, 2 முதல், 3 மாதம் வரை வளர்த்து விற்றால், ஒரு கோழிக்கு குறைந்தபட்சம், 400 ரூபாய் வீதம் கிடைக்கும். 400 கோழிகள் விற்பனை வாயிலாக, மாதம், 1.60 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது.
மீதியுள்ள, 100 குஞ்சுகளை, 7 மாதம் வரை வளர்த்து, ஒரு கோழி குறைந்தபட்சம், 2 கிலோ எடை வந்ததும், இறைச்சிக்காக விற்பனை செய்வேன். 1 கிலோவுக்கு, 450 ரூபாய் கிடைக்கும் என்பதால், ஒரு கோழிக்கு, 900 ரூபாய் வீதம், 100 இறைச்சி கோழிகள் விற்பனையால், மாதம், 90,000 ரூபாய் வருமானம் கிடைத்தது.
இவ்வாறு, 200 தாய் கோழிகள், 50 சேவல்கள் வாயிலாக, மாதம், 2.50 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது; தீவனம் மற்றும் இதர செலவுகள் போக, 1.20 லட்சம் ரூபாய் லாபமாக கிடைக்கிறது.
வியாபாரிகள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக, கோழிகளை விற்பனை செய்கிறேன். நானும், என் மனைவியும் பெரும்பாலான நேரம், பண்ணையில் தான், உழைப்பை செலுத்துகிறோம். இதற்கு நிறைய பலன் கிடைத்து வருகிறது!
தொடர்புக்கு:
96889 14506
எங்களின் 'ஹாட் இட்லி' கடை ரொம்ப பிரபலம்!
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே உள்ள நவி மும்பையில், 'ஹாட் இட்லி' என்ற பெயரில், உணவகங்கள் நடத்தி வரும் பால்ராஜ்:
என் சொந்த ஊர், தென்காசி மாவட்டத்தில் உள்ள குறிப்பன்குளம் கிராமம். 30 ஆண்டுகளுக்கு முன், மும்பைக்கு பிழைப்பு தேடி வந்தேன்.
கிடைக்கும் வேலைகளை செய்து வந்தேன்; சொற்ப அளவில் மட்டுமே வருமானம் கிடைத்தது. வருமானம் போதவில்லை என்பதால், அடுக்குமாடி குடியிருப்புகளில், கார் கழுவும் வேலை செய்தேன்.
அதன்பின், நாளிதழ்கள் வினியோகஸ்தர் ஒருவரிடம் இருந்து, வீடு, வீடாக செய்தித்தாள் போடும் ஒப்பந்தத்தை, 40,000 ரூபாய் கொடுத்து வாங்கி, தினமும், 1,000 செய்தித்தாள்களை வினியோகித்து வந்தேன்.
அந்த வேலை, காலை, 9:00 மணிக்கு முடிந்த பின், தேநீர் வியாபாரம் செய்தேன். அந்த வியாபாரத்தில் என் இரு சகோதரர்களும் இணைந்து கொண்டனர். எனக்கு திருமணமான பின், நிரந்தர வருமானம் தேவை என்பதை உணர்ந்தேன்.
என் சொந்த ஊரில் இருந்த என் தந்தை, ஹோட்டல் தொழில் செய்து வந்தார். பள்ளியில் நான் படிக்கும்போதே அவருக்கு உதவி செய்துள்ளேன்.
அந்த அனுபவத்தை பயன்படுத்தி, இட்லி கடை ஒன்றை துவக்கினேன். தந்தை, ஒரு மாதம் என்னுடன் தங்கி ஆலோசனைகளை வழங்கினார்.
சில ஆண்டுகள் வாடகை இடத்தில் கடையை நடத்தினோம். பணம் கொஞ்சம் சேர்ந்ததும், ஒரு கடையை சொந்தமாக வாங்கி, உணவகத்தை அங்கு மாற்றினோம்.
எப்போதும், மக்களுக்கு சூடாக உணவை கொடுக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம். அதற்கேற்ப உணவகத்திற்கு, 'ஹாட் இட்லி' என்றே பெயர் வைத்தோம்.
எங்கள் கடைக்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொழிலை மேலும் விரிவு படுத்த முடிவு செய்து, 2024ல் மேலும், மூன்று கடைகளை, 'ஹாட் இட்லி' என்ற, பெயரிலேயே துவக்கினோம்.
எங்களிடம் வேலை செய்யும் நம்பிக்கையான ஊழியர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுடைய பொறுப்பில் தான் கடைகளை கொடுத்துள்ளோம்.
கடைகளின் முதலீடு, செயல்பாடு உட்பட அனைத்தும், எங்களது கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. கடைகளை நானும், என் சகோதரர்களும் தான் கவனித்துக் கொள்கிறோம்.
எங்களிடம், 70க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்; அவர்களில் அதிகம் பேர் பெண்களே. தற்போது, ஆண்டுக்கு, 3 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. இதை, 7 கோடியாக அதிகரிப்பது தான் எங்களது அடுத்த இலக்கு!

