/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு ரூ.15 லட்சம் பேரம்!
/
கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு ரூ.15 லட்சம் பேரம்!
கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு ரூ.15 லட்சம் பேரம்!
கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு ரூ.15 லட்சம் பேரம்!
PUBLISHED ON : டிச 07, 2025 03:29 AM

''ப ல கோடி ரூபாயை தயார் பண்ணிட்டு இருக்காங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
''யார் ஓய் அது...'' என கேட்டார், குப்பண்ணா.
''இன்னும் நாலஞ்சு மாசத்துல, தமிழக சட்டசபை தேர்தல் வருதுல்ல... தென் மாவட்டங்கள்ல இருக்கிற அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., பிரமுகர்கள் பலரும், தேர்தல்ல போட்டியிட தயாராகிட்டு இருக்காங்க...
''எம்.எல்.ஏ., 'சீட்' கேட்டு விண்ணப்பிக்கிறப்பவே, தங்களது பொருளாதார பலத்தை காட்ட நினைக்கிறாங்க... இதனால பலரும் குறைஞ்சது, 5 கோடி ரூபாயை தயார் பண்ணிட்டு இருக்காங்க...
''விருப்ப மனு குடுத்தவங்களிடம், கட்சி தலைவர்கள் நேர்காணல் நடத்துறப்ப, 'சீட் குடுத்தா இதை விட அதிகமா செலவு பண்ணவும் எங்களிடம் வசதி இருக்கு'ன்னு சொல்லி அசத்தவும் திட்டமிட்டிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''சென்னை, வேளச்சேரி தொகுதிக்கு கடும் போட்டி நடக்கு வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த கட்சியில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''தமிழக பா.ஜ.,வுல தான்... அ.தி.மு.க., கூட்டணியில், இந்த தொகுதியை, பா.ஜ.,வுக்கு கேட்க, அக்கட்சி தலைவர்கள் திட்டமிட்டிருக்காவ வே...
''இதனால, இந்த தொகுதியில் போட்டியிட, பா.ஜ.,வுல நாலஞ்சு பேர் ஆர்வம் காட்டுதாவ... இதுல, 'டால்பின் இன்ஜினியரிங்' நிறுவனத்தை நடத்திட்டு வர்ற, 'டால்பின்' ஸ்ரீதரும் ஒருத்தர்... இவர், தமிழக பா.ஜ., துணை தலைவராகவும் இருக்காரு வே...
''இவர், 2011ல் விருகம்பாக்கத்துலயும், 2016ல் வேளச்சேரியிலும் போட்டியிட்டு தோத்து போயிட்டாரு... இந்த முறை, வேளச்சேரி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருக்காரு வே...
''சமீபத்துல, கார்த்திகை தீபத்திருநாள் வந்துச்சுல்லா... அப்ப, தொகுதி முழுக்க பெண்களுக்கு அகல் விளக்குகளை வழங்கி, ஓட்டு கேட்டிருக்காரு... அதே நேரம், 'ரெண்டு முறை சீட் குடுத்தும் ஜெயிக்க முடியாதவருக்கு மூணாவது முறையும் சீட் தருவாங்களா'ன்னு, பா.ஜ., நிர்வாகிகள் முணுமுணுத்துட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''பதினைஞ்சு லட்சம் ரூபாய் கேக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எதுக்கு வே...'' என கேட்டார், அண்ணாச்சி.
''ராமநாதபுரம் மாவட்டத்தில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள்ல காலியா இருக்கற, 32 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு சமீபத்துல எழுத்து தேர்வு நடந்துது... இதுல, அதிக மதிப்பெண் எடுத்தவாளுக்கு, 'இன்டர்வியூ' நடத்தினா ஓய்...
''இன்டர்வியூவுக்கு வந்துட்டு போனவாளை, கூட்டுறவு துறை அதிகாரிகள் சிலர் தொடர்பு கொண்டு பேசியிருக்கா... அப்ப, '15 லட்சம் ரூபாய் தந்தால் தான், வேலை கிடைக்கும்'னு சொல்லி, 'குறைந்தபட்சம், 12 லட்சம் ரூபாயாவது ரெடி பண்ணுங்கோ'ன்னு பேரம் பேசியிருக்கா ஓய்...
''இதனால, தேர்வு எழுதியவா எல்லாம், 'எழுத்து தேர்வு, இன்டர்வியூ எல்லாம் கண்துடைப்பு தான்... பணம் இருந்தா தான் அரசு வேலைங்கறது எழுதப்படாத சட்டமாகிடுத்து'ன்னு புலம்பறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

