வீரவநல்லூர் : வீரவநல்லூரில் அம்பை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆவுடையப்பனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் பிரசாரம் செய்தார்.
அம்பை தொகுதி திமுக வேட்பாளர் ஆவுடையப்பனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் வீரவநல்லூரில் தேர்தல் பிரசாரத்தை துவக்கி பேசியதாவது:-""யார் நாட்டிற்கு நல்லது செய்வார். யார் ஆட்சி வந்தால் நன்மை கிடைக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். 5 ஆண்டுகள் நல்லாட்சி நடந்தது. மற்ற மாநிலங்கள் பாராட்டும் வகையில் சாதனைகள் நடந்துள்ளது. 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுக்க முடியுமா என ஜெயலலிதா கிண்டல் அடித்தார். கருணாநிதி 1 ரூபாய்க்கு கிலோ அரிசி கொடுத்தார்.திருமண பெண்களுக்கு பணத்துடன் தாலிக்கு தங்கமும் தருவேன் என்கிறார் ஜெயலலிதா. தாலியை பற்றி அவருக்கு என்ன தெரியும். அவர் ஆட்சிக்கு வந்தவுடன் திருமண உதவித் தொகையை நிறுத்தி வைத்தார். கடந்த 5 ஆண்டுகளாக மக்களை பற்றி சிந்திக்காமல் சட்டசபைக்கும் வராமல் கொடநாடு எஸ்டேட்டில் இருந்தார் ஜெயலலிதா. அவர் ஆட்சியில் உருப்படியான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்பட்டதா என சிந்தித்து பாருங்கள்.
கூட்டணியில் இருக்கும் விஜயகாந்த் என்னால் தண்ணியடிக்காமல் பிரசாரம் செய்ய முடியாது என்கிறார். இந்நிலையை எண்ணிப்பாருங்கள். இவ்வூருக்கு பல நன்மைகளை நான் செய்துள்ளேன். நான் இங்கு நிற்கும் ரோடு எவ்வாறு சீரமைக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியும். இன்னும் மூன்று ஆண்டுகள் இருந்து உங்களுக்கு பல நன்மைகள் செய்யவுள்ளேன். அதோடு ஆவுடையப்பனும் சேர்ந்து சாதனை படைத்தால் இவ்வூர் இன்னும் சிறப்பாக முன்னேறும். ஆகையால் நான் செய்த சாதனைகளை மனதில் கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள்'' என்றார்.அவருடன் வேட்பாளர் ஆவுடையப்பன் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் வந்தனர்.