டி.கல்லுப்பட்டி : மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி சார்பில் குப்பை மேலாண்மை சிறப்பாக கையாளப்படுகிறது. மக்கும் குப்பையில் மண்புழு உரம் தயாரிக்கின்றனர். பிளாஸ்டிக் போன்ற மக்காத பொருட்கள் மறுசுழற்சிக்கு விடப்படுகிறது.
மதுரை மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மையின் கீழ் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்சாலை ரூ.பல கோடி மதிப்பில் செயல்படுகிறது. மாநகராட்சி வார்டுகளில் தினமும் சேகரிக்கப்படும் பத்து டன் குப்பைகள், மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்படுகின்றன. மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இவற்றிற்கு கேரள விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
முன்மாதிரி பேரூராட்சி: இதேபோல் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை சிறப்பாக கையாளப்படுகிறது. தமிழ்நாடு கேளிக்கை வரித்திட்டத்தின் கீழ் உரக்கிடங்கில் ரூ.10 லட்சம் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளன. பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொண்டு வரப்படுகின்றன. அவை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கின்றனர். பின், மக்கும் குப்பையை பதப்படுத்தி, அதிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கின்றனர். பிளாஸ்டிக் போன்ற மக்காத பொருட்களை மறு சுழற்சிக்காக அனுப்புகின்றனர்.
மண்புழு கிலோ ரூ.5 : டி.கல்லுப்பட்டி உரக்கிடங்கில் தயாரிக்கப்படும் மண்புழு உரம் கிலோ ரூ.5க்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் தரிசு நிலம் அதிகளவு இருப்பதால் நிலத்தை மேம்படுத்த மண்புழு உரம் அவசியம். எனவே, விவசாயிகளுக்கு ஆர்டரின் பேரில் மண்புழு உரம் தரப்படவுள்ளது.உரக்கிடங்கு பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: மக்கும் குப்பை 40 நாட்கள் பதப்படுத்தப்படும். பின், சல்லடையால் சலித்து மண்புழு உரம் தயாரிக்கிறோம். குப்பையை தரம்பிரிக்க நான்கு பெண்கள் உள்ளனர். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.188 சம்பளம். மக்கும் குப்பையில் இருந்து முதல்முதலாக மண்புழு உரம் தயாரித்துள்ளோம். பேரூராட்சி நிர்வாகம் உத்தரவுக்கு பின் விற்பனை செய்யப்படும், என்றார்.
கூடுதல் சம்பளம் எதிர்பார்ப்பு : டி.கல்லுப்பட்டி உரக்கிடங்கின் திடக்கழிவு மேலாண்மை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குப்பையை தரம் பிரிக்கும் பணி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. குப்பை துர்நாற்றத்திலும், கடும் வெயிலிலும் வேலை பார்க்கும் பெண்களுக்கு சம்பளம்(ரூ.188) போதுமானதாக இல்லை. ஒப்பந்ததாரர் கூடுதல் சம்பளம் தருவார், என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.