கீழக்கரை : கீழக்கரையில் புதிதாக துவக்கப் பட்டுள்ள தாலுகா அலுவலகம் வர, போதிய அளவு பஸ்கள் இல்லாததால், இத் தாலுகாவில் உள்ள 26 கிராமக்கள் போக்குவரத்திற்கு மிகுந்த சிரமப் படுகின்றனர்.
கீழக்கரையை தனித் தாலுகா ஆக்கப்படும் என கடந்த ஆண்டு ஆக., 11ல் சட்டசபையில், விதி எண் 110 ன் கீழ், அப்போதைய முதல்வர் ஜெ., அறிவித்தார். அதைத்தொடர்ந்து 7 மாதங்களுக்கு பின், கடந்த மார்ச் 14ல் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிகமாக தாலுகா அலுவலகம் அமைக்கப் பட்டு செயல்பட்டு வருகிறது. கீழக்கரை தாலுகாவில், திருப் புல்லாணி யூனியனில் உள்ள 24 கிராமங்களும், கடலாடி யூனியனில் உள்ள ஏர்வாடி, இதம் பாடல் ஆகிய கிராமங் களுமாக மொத்தம் 26 கிராமங்கள் இடம் பெற்றுள்ளன. உத்திரகோசமங்கை முதல் திருப்புல்லாணி வரையிலும், பெரியபட்டினம் முதல் திருப் புல்லாணி வரையிலும் உள்ள இக்கிராமங்களில் வசிப்பவர்கள் அரசின் சலுகைகள், சொத்து மற்றும் கல்வி சான்றிதழ்கள் பெற, கீழக்கரை தாலுகா அலுவலகம் வருவதற்கு, பஸ்கள் குறைவாக உள்ளன. இதனால் மாணவர்கள், ஏழை விவசாயிகள், பெண்கள் மிகுந்த சிரமப் படுகின்றனர்.
ரெகுநாதபுரம் வெண்மதி கூறுகையில், ""பெரியபட்டினம், ரெகுநாதபுரம், கொல்லந்தோப்பு, நயினாமரைக்கான், பத்திரா தரவை, வண்ணாங்குண்டு, தினைக் குளம் வழியாக திருப் புல்லாணி, கீழக் கரை செல்லும் வகையில் கூடுதல் பஸ் வசதி வேண்டும். முன்பு ராம நாதபுரம் தாலுகா அலுவலகத்திற்கு செல்ல 20 நிமிடங்களுக்கு ஒருமுறை பஸ் வசதி இருந்தது. இதனால், விரைவாக எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டோம். தற்போது சான்றிதழ் பெற ராமநாதபுரம் சென்று, அங்கிருந்து கீழக்கரை செல்ல வேண்டியுள்ளது,'' என்றார்.
தினைக்குளம் ரமேஷ் கூறுகையில், ""உத்திரகோச மங்கையை சுற்றி உள்ள வருவாய் கிராமங்களை இணைக்கும் வகையில் பஸ்கள் இயக்கப்பட வில்லை. கடந்த 2009 ல் இயங்கிய உத்திரகோசமங்கை - திருப் புல்லாணி இடையிலான பஸ் சர்வீஸ் நிறுத்தப் பட்டுள்ளது. இதனால், ஏர்வாடியில் இருந்து கீழக்கரைக்கு வந்து பின்னர் உத்திரகோச மங்கை செல்ல வேண்டியுள்ளது. மீண்டும் உத்திரகோசமங்கை - திருப் புல்லாணி இடையே கீழக்கரை வழியாக பஸ்களை இயக்க வேண்டும். இதனால் பயண நேரம் குறைவதுடன் அரசுக்கு வருவாயும் அதிகரிக்கும்,'' என்றார்.
இதுகுறித்து தாலுகா அலுவலர் ஒருவர் கூறுகையில், ""மார்ச் 31 முடிய இதர பணிகளை ராமநாதபுரத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் முடித்து கொள்ளலாம். ஏப்., 1க்கு பிறகு பொதுமக்களின் மனுக்கள் இங்கு பெறப்படும்,'' என்றார்.