பொள்ளாச்சி : தீபாவளி பண்டிகையை கழிக்க பொள்ளாச்சி அடுத்த ஆழியாறில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்ததால், அணைக்கட்டு பகுதி களை கட்டியது. இதனால், ஆழியாறு சோதனை சாவடியில் மூன்று நாட்களில் நான்கு லட்சம் ரூபாய் வரை வசூலானது.
தீபாவளி பண்டிகையையொட்டி அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. பண்டிகை விடுமுறையை கொண்டாட உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலா பயணிகளும் கடந்த மூன்று நாட்களாக ஆழியாறு அணைக்கட்டு பகுதியில் குவிந்தனர். ஆழியாறு அணை, ஆழியாறு ஆறு, ஆதாளியம்மன்கோவில் பகுதிகளில் மக்கள் குடும்பம் சகிதமாக வந்திருந்து, விடுமுறையை கழித்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், நான்கு நாட்களாக மழை பெய்ததால், குளு,குளுவென காற்று வீசுகிறது. அணை மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. கடந்த இரு நாட்களாக மழை பெய்யாததால், பூங்கா பகுதியில் பச்சை "பசேல்' என புற்களும் வளர்ந்துள்ளது, பார்வைக்கு குளிர்ச்சி அளிப்பது போல் இருந்தது. இதை கண்டுகளிக்க வெளிமாநில சுற்றுலா பயணிகளும் ஆழியாறு பகுதிகளுக்கு படையெடுத்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி, பயணிகள் அதிகளவில் குவிந்ததால் ஒரு வாரமாக ரத்து செய்யப்பட்ட படகு சவாரி மீண்டும் துவங்கப்பட்டது. ஆழியாறுக்கு வந்த சுற்றுலா பயணிகள், மங்கிபால்ஸ்சுக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். ஆழியாறுக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம், நுழைவு கட்டணமாக நபருக்கு 15 ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டது. இதுதவிர, கேமராவுக்கு 25 ரூபாயும், வீடியோ கேமராவுக்கு 150 ரூபாயும் வசூலிக்கப்பட்டது. ஆழியாறு பகுதிக்கு மூன்று நாட்களில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். முதல் நாளில், ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் நாளில், ஒரு லட்சம் ரூபாயும், நேற்று ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரையும் வசூலானது.
மங்கி பால்சில் பயணிகளின் பாதுகாப்புக்காக, வனத்துறையினர் சார்பில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர். அணைக்கு வந்த பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே அணைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். பஸ், வேன்களில் குடும்பத்துடன் வந்திருந்தவர்கள் வண்ணமீன் காட்சியகம், பூங்கா, அணைப்பகுதிகளை ஆக்கிரமித்திருந்தனர். பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல தடை: விடுமுறை நாட்களை கழிக்க சுற்றுலாப்பயணிகள் திருமூர்த்திமலைக்கு படையெடுத்ததால், அப்பகுதியே திருவிழாக்கோலம் பூண்டது. நீர் வரத்து அதிகரித்து இருந்ததால், பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
தீபாவளி பண்டிகை விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கழிக்க குடும்பத்துடன் சுற்றுலாப்பயணிகள் அதிகளவு திருமூர்த்தி மலைக்கு படையெடுத்தனர். மேலும், புதியதாக திருமணமான தம்பதிகள் தீபாவளி பண்டிகை கொண்டாட திருமூர்த்தி மலைக்கு வந்தனர். கூட்டமாக வந்த சுற்றுலாப்பயணிகள் அமணலிங்கேஸ்வரை தரிசித்த பின்பு, படகுத்துறையில் சவாரி மேற்கொள்ள ஆர்வம் காட்டினர். இதனால், அப்பகுதியே திருவிழாக்கோலம் பூண்டது. மூன்று நாட்களில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் வந்தனர்.
நேற்று மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் குடும்பத்துடன் திருமூர்த்திமலைக்கு வந்து விடுமுறை தினத்தை மகிழ்ச்சியுடன் கழித்தனர். திருமூர்த்தி மலைக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் அதிகளவு வந்தனர். ஆனால், மலையில் தொடர் மழை காரணமாக அருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் பஞ்சலிங்க அருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், வீண் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்களும் தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலாப்பயணிகளும், புதுமணத்தம்பதிகளும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது.
ஆழியாறில் குவிந்த "இளசுகள்' : ஆழியாறு அணைப்பகுதியில் வண்ணமீன் காட்சியகம், பூங்கா, படகுசவாரி, அணையின் அழகிய தோற்றம், குரங்கு அருவி, ஆதாளியம்மன் கோவில் பகுதிகளில், விடுமுறையை கழிக்க வந்த சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குடும்பத்துடன் குவிந்தவர்களை விட ஜோடி, ஜோடியாக வந்த இளசுகளே அதிகம் காணப்பட்டனர். இதனால், பஸ்களில் பயணிகள் நெரிசல் மிகுந்து காணப்பட்டது. வெளியூர்களில் இருந்து இருசக்கர வாகனங்களில் வந்த ஜோடிகள் ஆழியாறு பூங்காவை முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டனர். ஆழியாறில் நேற்று எங்கு பார்த்தால் கூட்ட நெரிசல் நிலவியது.