| படித்தது பி.இ., பார்ப்பது 'அக்ரி' Dinamalar
படித்தது பி.இ., பார்ப்பது 'அக்ரி'
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 மே
2015
01:30

''ஐ.டி., படிப்பை போல, வேளாண்மையை அரசு ஊக்குவிப்பதில்லை. கடன் வாங்காமல் விவசாயம் செய்ய முடியும் என்பதை, எந்த அரசும் ஊக்குவிப்பதில்லை. இயற்கை விவசாயம்

மேற்கொள்ள மன தைரியம் வேண்டும்,'' என்கிறார், இயற்கை விவசாயி சிவகுமார்.

அன்னுார், தேவாங்கபுரத்தைச் சேர்ந்தவர் சிவகுமார்; பி.இ.,பட்டதாரி. விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் விஸ்கோஸ், கெம்ப்ளாஸ்ட் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது சொந்த முயற்சியில் துவங்கிய நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இவரிடம் பணியாற்றினாலும், மாதம் பல லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுத்தாலும், இவருக்கு திருப்தி விவசாயத்தில் தான்.

கடந்த மூன்று ஆண்டுகளாக முழு நேர விவசாயத்தில் ஈடுபட்டுள்ள இவர், தனது எம்.பி.ஏ., பட்டதாரி மனைவி ஜெயந்தியுடன் சேர்ந்து, தனது 11 ஏக்கர் நிலத்தை பஞ்சகவ்யம், ஜீவமிருத்தி பயன்படுத்தி, பண்படுத்தி சாகுபடி செய்கிறார்.

இரண்டு ஏக்கரில் வாழை, ஒரு ஏக்கரில் வெந்தயம், முளைக்கீரை, சிறுகீரை, சிவப்பு தண்டு, பாலக்கீரை, அரைக்கீரை, மணத்தக்காளி மற்றும் புளிச்சகீரை என, எட்டு வகை கீரைகள் பயிரிட்டுள்ளார். மேலும் ஒரு ஏக்கரில் கீரை பயிரிட, பண்படுத்தி வைத்துள்ளார்.

காய்கறிகள் இரண்டு ஏக்கரிலும், பப்பாளி ஒன்றரை ஏக்கரிலும் சாகுபடி செய்துள்ள இவர், விதைப்புக்காக சில ஏக்கர் நிலங்களை தயார்படுத்தி வருகிறார். நீர்மட்டம் குறையாத ஆழ்குழாய் கிணறு, நிலமட்ட கிணறு என இரண்டு கிணறுகள், இவரது விவசாய ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளன.

சிவகுமார் கூறுகையில், ''ஆரோக்கியத்தை கெடுக்கும் ரசாயனத்தை, மண்ணுக்கு உரமாக போடுவதில்லை. மனிதர்களையும், கால்நடைகளையும் மலடாக்கும் மருந்துகளையும் தெளிப்பதில்லை. மண்ணின் தன்மை கெட்டுவிட்டது என விவசாயி தான் கவலைப்படுகிறான்.

ஆனாலும், உரம்போட்டு, மருந்தடித்து பயிர் செய்பவர்கள், பளபளக்கும் காய்கறிகள், கீரைகளை பன்னாட்டு விற்பனை மையங்களில் விற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். சுத்தமான காய்கறி, கீரையை சாகுபடி செய்து விற்கும் எங்களின் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைப்பதில்லை.

''குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், மூளை வளர்ச்சியும் குறைந்து வருவதாக மருத்துவம் கூறுகிறது. இதற்கு தினம் ஒரு கீரையை உணவாக கொடுத்தால் முழுப்பலன் கிடைக்கும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். எதிர்காலத்தில் 10 ஏக்கர் நிலத்திலும், இயற்கை சாகுபடி முறையில் கீரை மக்களுக்கு கொடுப்பதே நோக்கம்,'' என்றார்.

 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X