| வாங்கும் காய்கறிகளில் நஞ்சு இருக்கிறதா ஆய்வு செய்யலாம்:மதுரை விவசாயக் கல்லூரியில் வாய்ப்பு Dinamalar
வாங்கும் காய்கறிகளில் நஞ்சு இருக்கிறதா ஆய்வு செய்யலாம்:மதுரை விவசாயக் கல்லூரியில் வாய்ப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2015
03:28

மதுரை:சந்தையில் வாங்கும் காய்கறிகளில் நஞ்சு இருக்கிறதா என்பதை மதுரை விவசாய கல்லுாரி ஆய்வு மையத்தில் கட்டணம் செலுத்தி தெரிந்து கொள்ளலாம்.விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளில் நஞ்சுள்ளதா என்பதை கண்டறிய இக்கல்லுாரியில் ரூ.45 லட்சம் செலவில் இரண்டு கருவிகள் நிறுவப்பட்டன. இதில் கத்தரி, தக்காளி, வெண்டை போன்ற காய்கறிகளை தண்ணீரில் கழுவி அந்த தண்ணீரில் எஞ்சியுள்ள நஞ்சு கழிவுகளை கண்டறிவது ஒருமுறை.


கிழங்கு வகைகள், பீட்ரூட், கேரட், காலிபிளவரை நசுக்கி அதன் உட்புறத்தில் நஞ்சு ஊடுருவியுள்ளதா என்பதை கண்டறிவது இன்னொரு முறை. இதுகுறித்து கல்லுாரி பூச்சியியல் துறைத் தலைவர் கல்யாணசுந்தரம் கூறியது: இந்த ஆராய்ச்சி திட்டத்தில் பிஎச்.டி., மாணவர்கள் 40 பேர் மற்றும் முதுநிலை மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். வாடிப்பட்டி, அழகர்கோவில், மேலுார், நாகமலை, திண்டுக்கல்லில் நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம் பகுதி விவசாயிகளின் வயலுக்கு மாணவர்கள் சென்று காய்கறிகளை சேகரிக்கின்றனர்.


எவ்வளவு மருந்து தெளித்தார்கள், எத்தனை முறை, அதற்கான இடைவெளி, மருந்தடித்த எத்தனை நாட்களில் அறுவடை செய்தார்கள், அதற்கு பின் பூச்சிக்கொல்லி மருந்தில் நனைத்தார்களா என்கிற தகவல்களை விவசாயிகளிடம் சேகரிக்கின்றனர். மாட்டுத்தாவணி, சிம்மக்கல், உழவர்சந்தைகளில் இருந்து காய்கறிகளை வாங்கி ஆய்வு செய்கிறோம். ஒருமாத கால ஆய்வுக்குபின் முடிவுகள் தெரியவரும்.விவசாயிகள், வியாபாரிகள், தொழில்முனைவோர், மகளிர் குழுக்கள், இயற்கை ஆர்வலர்களும் காய்கறிகளை கொடுத்து கட்டண முறையில் (ரூ.1000 - ரூ.5000 வரை) ஆய்வு செய்யலாம், என்றார். விபரங்களுக்கு: 0452 - 242 2955.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X