காளையார்கோவில் : காளையார்கோவில் ஒன்றியத்தில் நெற்பயிரில் செந்தாளை, புகையான், இலைச்சுருட்டு நோய் தாக்கியுள்ளதால், மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இங்கு, பெய்து வரும் மழையினால் ஒன்றிய அளவில் கண்மாய் , குளங்களில் நீர் பெருகியுள்ளது. கண்மாய் நீரை நம்பி இங்கு, 10,500 எக்டேர் நில விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது, நெற்பயிர் விளைந்துவரும் நிலையில், செந்தாளை நோய் தாக்கி இலைகள் செம்பழுப்பாக மாறி வருகிறது. புகையான் நோயால் இலைகள் வெளுத்துள்ளன. இலை சுருட்டு நோய் தாக்கமும் அதிகரித்துள்ளன. இதனால், நெல் மகசூல் பாதிக்கும் என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இது குறித்து விவசாயத்துறை உதவி இயக்குனர் (பொறுப்பு) ஜைனுல்பவுசியாராணி கூறுகையில், "" நெற் பயிரில் ஜிங்க் சத்து குறைவால், செந்தாளை நோய் தாக்குகிறது. இவை தாக்கிய நிலத்தில் தண்ணீரை வெளியேற்ற வேண்டும். அதில், ஏக்கருக்கு 5 கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தை மணலுடன் கலந்து இடவேண்டும். புகையான் நோய் தாக்கினால், ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 400 மில்லி நுவான் மருந்து கலந்து தெளிக்கவும். இலைச்சுருட்டு நோய்க்கு, 200 லிட்டர் தண்ணீரில், பிரிமியன் சூப்பர் 400 மில்லி மருந்தை கலந்து தெளிக்கவும். விவசாய விரிவாக்க அலுவலகத்தில், ஜிப்சம், ஜிங் சல்பேட், வசம்பு, பிரிமியன் சூப்பர், அசார் டிராக்டின் மருந்துகள், போதுமான அளவில் இருப்பு உள்ளன. இதை 50 சதவீத மானியத்தில் பெறலாம்,'' என்றார்.