கோவை:அரசு பள்ளிகள் என்றாலே முகம் சுளிக்கும் பொதுமக்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக, சுகாதாரத்துடன் செயல்பட்டு வருகிறது மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி.
கடந்த, 1964ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இப்பள்ளி, தற்போது, ஒரு ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. இதில், 20 சென்ட் இடத்தை முழுவதும் இயற்கை சூழல்களை மேம்படுத்தும் நோக்கில் மரங்களும், மரக்கன்றுகளும் உள்ளன.இப்பள்ளி வளாகத்தினுள், ஒன்பது தென்னை மரம் மற்றும், 15க்கும் மேற்பட்ட பலதரப்பட்ட மரங்கள் உள்ளன. மேலும், பூச்செடிகளும் மரக்கன்றுகளும், காலி இடங்களில் நடப்பட்டு மாணவர்களால், தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
இப்பள்ளியில், எட்டு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 255 மாணவர்கள் படிக்கின்றனர். மூன்றாம் வகுப்பு வரை, ஆங்கில வழிக்கல்வி செயல்பட்டு வருகிறது.இடைநிற்றல் ஏற்படாவகையில், ஒவ்வொரு மாணவன் மீதும் தனிகவனம் செலுத்தப்படுகிறது. போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களை, ஆட்டோக்கள் வைத்து பள்ளிக்கு அழைத்து வரும் வசதி, அனைவருக்கும் கல்வி இயக்கத்தால் செய்யப்பட்டுள்ளது.
'தமிழகத்தில், அரசு பள்ளிகள் என்றாலே அசுத்தமான சூழல்களுடன் காணப்படும்; அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவதிப்பட வேண்டும்' என்பது பொதுவாக மக்கள் மனதில் பதிந்த ஒன்று. ஆனால், அனைத்து அரசு பள்ளிகளுக்கும் முன் உதாரணமாக சுத்தம், சுகாதாரத்தை முன்வைத்து இப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
பாடத்திட்டங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்துக்கு இணையாக மாணவர்களுக்கு சுத்தம், சுகாதாரம் குறித்து கற்பிக்கப்படுகிறது. ஒரு சிறு குப்பையை கூட, இப்பள்ளி வகுப்பறையிலும், வளாகத்திலும் காண்பது என்பது இயலாதது.
அரசின் நிதியை எதிர்பாராமல், தலைமையாசிரியை, ஆசிரியர்கள் முயற்சி செய்து, 'எல் அண்ட் டி' போன்ற தனியார் நிறுவனங்கள், அப்பகுதி அரசு அலுவலகங்கள், தொண்டு நிறுவனங்களில் உதவி பெற்று தரமாக கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. எட்டு வகுப்பறை கள், ஒரு தலைமையாசிரியர் அறை உள்ளது.மேலும், மாணவர்களுக்கு, மாணவிகளுக்கும் எண்ணிக்கைக்கு தகுந்தபடி கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதி முழுமையான பராமரிப்புடன் உள்ளது. இவை தவிர, அனைத்து மாணவர்களுக்கும் ஷூ, டை, பெல்ட் மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
கழிவறைகள் உட்புறமும், வெளிப்புறமும் மாணவர்களுக்கு சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கை கழுவுதல், காலணி அணிதல், மரம் வளர்த்தல், தனிநபர் சுகாதாரம் குறித்த வாசகங்கள் வண்ண ஓவியங்களுடன் எழுதப்பட்டுள்ளன. மேலும், பாலியல் வன்கொடுமை, தெருவோர குழந்தைகள், காணாமல் போகும் குழந்தைகள், குடும்ப வன்முறையால் பாதிக்கும் குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள் போன்ற பிரச்னைகளுக்கான தொடர்பு எண்களும் உரிய விளக்கப்படங்களுடன் வரையப்பட்டுள்ளன.
சிரம் உயர்த்த கரம்:பள்ளி தலைமையாசிரியை சதி கூறுகையில், ''மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை தாண்டி சமூக பொறுப்புகளை கற்பிப்பது அவசியம். தன் சுத்தம், வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தமாக வைத்தல், வீடுகளில் சுகாதார சூழல்களை ஏற்படுத்துதல் போன்றவை கற்பிக்கப்படுகின்றன. பள்ளி வளாகத்தில், ஒதுக்கப்பட்ட இடத்தில் மாணவர்கள், குப்பைகள் போடுவதை மாணவர்கள் பழக்கப்படுத்திக் கொண்டனர். அன்புடன் கூடிய கண்டிப்பு மாணவர்களை எங்கள் வழிக்கு கொண்டு வந்துவிட்டது. அரசு பள்ளிகளை மேம்படுத்த அரசு நிதியை மட்டும் நம்பி இருக்காமல், பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து கரம் கொடுத்தால், அரசு பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் எவ்வித வேறுபாடுகளும் இருக்காது,'' என்றார்.