சென்னை : நான்கு வயது சிறுமியிடம், பாலியல் தொந்தரவு செய்தவருக்கு, நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.
சூளைமேட்டை சேர்ந்தவர், நஷீர், 32; மெத்தை கடை ஊழியர். 2014ம் ஆண்டு, அதே பகுதியை சேர்ந்த நான்கு வயது சிறுமியை, கடையில் வைத்து, பாலியல் தொந்தரவு செய்தார் என, சிறுமியின் தந்தை சூளைமேடு போலீசில் புகார் செய்தார். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார தடுப்பு சட்டத்தில், நஷீர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கு, சென்னை மகளிர் அமர்வு நீதிமன்றத்தில், நடந்து வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மீனா சதீஷ் பிறப்பித்த உத்தரவு: சிறுமியை, நஷீர் பாலியல் தொந்தரவு செய்தது, சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையுடன், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், குழந்தைக்கு இழப்பீடாக, எதிர்மனுதாரர், 5,000 ரூபாய் வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.