மடிப்பாக்கம் : மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், மாணவர்களின் பெற்றோருக்கு, பள்ளி நிர்வாகம் அனுப்பிய தவறான தகவலால், பரபரப்பு ஏற்பட்டது.
மடிப்பாக்கம், கூட்டு ரோடு அருகே, மடிப்பாக்கம் பிரதான சாலையில், தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அங்கு, மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை எனில், அவர்களின் பெற்றோருக்கு, அலைபேசி மூலம் குறுந்தகவல் அளிப்பது வழக்கம். இந்த நிலையில், நேற்று காலை, மாணவர் ஒருவர் பள்ளிக்கு வரவில்லை என, அவரின் பெற்றோருக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டது. 'சர்வரில்' ஏற்பட்ட கோளாறால், பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியரின் பெற்றோருக்கும், அந்த தகவல் சென்றுவிட்டது. தவறை உணர்ந்த பள்ளி நிர்வாகம், மறுப்பு தகவல் அளித்தது. அதற்குள், பள்ளி முன் நுாற்றுக்கணக்கான பெற்றோர் கூடிவிட்டனர். பள்ளி நிர்வாகம், தங்கள் தவறை எடுத்துக் கூறியதை அடுத்து, பெற்றோர் கலைந்து சென்றனர். இதனால், அந்தப் பகுதியில், ஒரு மணிநேரத்திற்கு பரபரப்பு நிலவியதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.