சென்னை:வெள்ள பாதிப்புகளுக்கு முக்கிய காரணமாக இருந்த, அடையாற்றின் ஆக்கிரமிப்புகள் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை, காஞ்சிபுரம் கலெக்டர் கஜலட்சுமி, அதிரடியாக அகற்றி வருகிறார். சென்னை மாநகராட்சி, அரசியலைப் புறந்தள்ளி, அவரது நடவடிக்கையை பின்பற்றினால் மட்டுமே, சென்னையில் உள்ள நீர்நிலைகளால் எதிர்காலத்தில், எந்த பாதிப்பும் ஏற்படாது.
வடகிழக்கு பருவமழையால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட, முடிச்சூர், வரதராஜபுரம் ஆகிய பகுதிகள், மிக அதிகமாக பாதிக்கப்பட்டன. ஆய்வு, அதிரடி அகற்றம்வெள்ள பாதிப்புகளுக்கான காரணம் குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி, முடிச்சூர் பகுதி வெள்ள நிவாரண ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா ஆகியோர் விரிவான ஆய்வு நடத்தினர். அதில், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட, அடையாற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களே பிரதான காரணம் என, தெரியவந்தது. ஆற்றின் அகலம், ஆக்கிரமிப்புகளால் பாதியாக சுருங்கிவிட்டது. ஆற்றின் குறுக்கே தடுப்புச் சுவர், கட்டடங்கள் இருந்ததால், கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார்.இதையடுத்து, போர்க்கால அடிப்படையில், அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற உத்தரவிட்டார். அவரது உத்தரவின் படி, முடிச்சூர் - மணிமங்கலம் சாலையில், வரதராஜபுரம் ஊராட்சி எல்லைப் பகுதியில், ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர், கடைகள், வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.௪௫ கட்டடங்கள் கண்டுபிடிப்புநேற்று முதல், மூன்று தளங்கள் கொண்ட, அடுக்குமாடி குடியிருப்பை, இடிக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் மட்டும், மொத்தம், 45 கட்டடங்கள், ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பது, கலெக்டரின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அனைத்து கட்டடங்களும், ஒரு வாரத்திற்குள் அகற்றப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆக்கிரமிப்புகள் அகற்றம் மட்டுமின்றி, பி.டி.சி., குவாட்டர்ஸ், வரதராஜபுரம் பகுதிகளில், அடையாற்றுடன் இணையும் கால்வாய்களை, துார்வாரி அகலப்படுத்தும் பணிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதன்மூலம், தற்போது அந்த பகுதிகளில் வெள்ளம் வேகமாக வடிவதுடன், ஆற்றின் அகலமும் இருமடங்கு அதிகரித்துள்ளது.சென்னையிலும் தொடருமா?சென்னை மாநகராட்சியின் தென்சென்னை பகுதியில், இந்த முறை அதிகமான வெள்ள பாதிப்பிற்கு, அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கே காரணம்.
மாநகராட்சி எல்லையிலும், அடையாற்றில் ஏகப்பட்ட ஆக்கிரமிப்புகள் உள்ளன. அடையாறு மட்டுமின்றி, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் போன்ற பொதுப்பணி துறை நீர்வழித்தடங்களிலும், ஓட்டேரி நல்லா, கேப்டன் காட்டன் கால்வாய் உள்ளிட்ட மாநகராட்சி நீர்வழித்தடங்களிலும் அதிக ஆக்கிரமிப்புகள் உள்ளன.அவற்றால், உபரிநீர் வெளியேற வழியின்றி, குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. தற்போது காஞ்சிபுரம் கலெக்டர் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கையை போன்று, சென்னை மாநகராட்சி நிர்வாகமும், ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்றினால் மட்டுமே, வர உள்ள மழைக்கும், எதிர்கால பருவமழைக்கும், சென்னை நகரம் வெள்ளத்தில் இருந்து தப்பிக்கும்.
பம்பரம் போல சுழலும் கலெக்டர்மாவட்ட மக்கள் மனதார பாராட்டு:காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக கஜலட்சுமி சமீபத்தில் தான், பதவி ஏற்றார். அவர் பொறுப்பேற்றது முதல், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், பம்பரமாக சுழன்று பணியாற்றுகிறார். குறிப்பாக, மழைக் காலங்களில், கலெக்டரின் பணி சிறப்பாக இருந்தது. முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில், வெள்ளநீரில் இறங்கி களப்பணி ஆற்றினார். வெள்ள பாதிப்பிற்கு காரணமான ஆக்கிரமிப்புகளை, பாரபட்சமின்றி இடித்து தள்ள உத்தரவிட்டார். யாருடைய சிபாரிசும், கலெக்டரிடம் எடுபடுவதில்லை. கலெக்டர் கஜலட்சுமியின் இந்த அதிரடி, மாவட்ட மக்கள் மத்தியில், பல ஆண்டுகளுக்கு பின் ஒரு துடிப்பான கலெக்டரை மாவட்டம் பெற்றுள்ளதாக பாராட்டுகளை குவித்து வருகிறது.
முழுமையாக அகற்றப்படும்:காஞ்சிபுரம் கலெக்டர் கஜலட்சுமி கூறியதாவது:அடையாற்றில், பெருங்களத்துார், அம்பேத்கர் நகர் பகுதியில், 124 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன. இதன் மூலம், 7.5 ஏக்கர், பொதுப்பணி துறை இடம் மீட்கப்பட்டது. அந்த இடத்தை மீட்டதன் மூலம், ஆற்றின் அகலம் 20 மீ., முதல் 60 மீ., ஆக அதிகரித்துள்ளது.
பி.டி.சி., குவாட்டர்ஸ், வரதராஜபுரம் பகுதியில், வெள்ளம் வடிய வசதியாக, ஆற்றை ஆக்கிரமித்திருந்த ஒரு ஏக்கர் பரப்பளவிலான ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அங்கும் ஆறு, 60 மீ., அகலத்திற்கு அகலமாகும். இந்த பணிகளால், அடையாற்றில் வேகமாக தண்ணீர் வடிந்து வருகிறது.தற்போது அனைத்து அதிகாரிகளும் நிவாரண பணிகளில் இருப்பதால், அவசியமான இடங்களில் மட்டும் போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. வெள்ள நிவாரண பணிகள் முடிந்த பின், முழுமையாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.இவ்வாறு, கலெக்டர் கஜலட்சுமி கூறினார்.
எங்கெங்கு அகற்றம்?அடையாற்றில், பொதுப்பணி துறையின் ஆக்கிரமிப்பு நிலம் 8.5 ஏக்கர் மீட்கப்பட்டு, ஆற்றின் அகலம், 60 மீ., ஆக அதிகரித்துள்ளது. பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் இருந்த திருநீர்மலை நாட்டு கால்வாய், ௧.௫ கி.மீ., துாரத்திற்கு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, துார்வாரப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் நகர பகுதியில், வேகவதி ஆற்றில் இருந்த, 60 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு, 7 கி.மீ., துாரத்திற்கு நீர் தங்கு தடையின்றி செல்ல, வழி செய்யப்பட்டுள்ளது.செங்கல்பட்டில் 70 மீ., நீளத்திற்கும், ஜே.சி.கே. நகர் பகுதியில் ஒரு கி.மீ., துாரத்திற்கும், காயரம்பேடு மகாலட்சுமி நகரில், 700 மீ., துாரத்திற்கும், பாலாற்றுடன் இணையும் நீஞ்சல் மடுவில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி இருந்த கால்வாயில், 1400 மீ., துாரத்திற்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.