மேலுார்:மேலுார் பகுதியில் பராமரிப்பற்ற கால்வாயால் பொதுப்பணித்துறை தண்ணீர் விடமறுத்ததை அடுத்து, கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கால்வாயை சுத்தம் செய்தனர்.
குறிச்சிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கூலிபட்டி கிராமத்திற்கு 12வது பெரியாறு பிரதான கால்வாயில் இருந்து வரக்கூடிய தண்ணீர், தனியாமங்கலம் 22வது பிரிவு கால்வாய் வழியாக வந்தடையும். அதனால் உலகங்குளம், இலுப்பக்குளம் உள்ளிட்ட 4 கண்மாய்கள் நிறைந்து, 300 ஏக்கர் பயன் பெறும். தண்ணீர் திறந்து 22 நாட்களாகியும் இதுவரை தண்ணீர் வராமல் கண்மாய் மற்றும் குளங்கள் வறண்டு காணப்படுகின்றன.
பராமரிப்பற்ற கால்வாய்களால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் தர மறுப்பதாக கூறிய கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கால்வாயை சுத்தம் செய்தனர்.
தனசேகர்: அதிகாரிகளிடம் பல முறை மனுக்கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
பெரியாற்று கால்வாயில் தண்ணீர் வந்தால் மட்டுமே இப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பஞ்சம் நீங்கும். அதிகாரிகள் தண்ணீர் தர மறுத்ததால், கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கால்வாயை சுத்தம் செய்துள்ளோம். அதனால் அதிகாரிகள் தண்ணீர் தர வேண்டும்.
உதவி செயற்பொறியாளர் கதிரவன்: -தேவைக்கேற்ப ஒவ்வொரு பிரிவு கால்வாய்க்கும் தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது. 22வது பிரிவு கால்வாய்க்கு டிச.,23ல் தண்ணீர் திறக்கப்படும், என்றார்.