சென்னிமலை: சிலை கடத்தல் தொடர்பாக, ஊத்துக்குளி அருகே, மூன்று பேரை கைது செய்த போலீசார், ஒரு சிலையை நேற்றிரவு பறிமுதல் செய்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் தீனதயாள், 78. இவர் சர்வதேச சிலை கடத்தல்காரன் சுபாஷ் சந்திரகபூரின் நெருங்கிய கூட்டாளி. இவர் வீட்டில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் மீட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் பல நூறு ஆண்டு காலம் பழமையான சிலைகளை குறி வைத்து இந்த கும்பல் செயல்பட்டு வந்துள்ளதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே படியூர் சிவகிரியில், மூன்று பேர் கும்பலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்றிரவு, 8 மணி அளவில் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து ஒரு சிலை, மகேந்திரா வெரிட்டோ காரையும் பறிமுதல் செய்தனர். மூன்று பேரையும், சென்னிமலை போலீஸ் ஸ்டேஷனுக்கு உடனடியாக கொண்டு சென்றனர். அவர்களிடம் பெருந்துறை டி.எஸ்.பி., பாஸ்கர், சென்னிமலை இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். மூவர் குறித்த விவரங்களையும் போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர். சென்னிமலையில் சிலைகளை பதுக்கி வைத்து, விற்பனைக்காக பேரம் பேசப்பட்டுள்ளது. மேலும் சிலை கடத்தலில், சென்னிமலையை சேர்ந்த இருவருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரகசிய விசாரணை நடத்தி, சிவகிரியில் பதுங்கியிருந்த மூவர் கும்பலை பிடித்திருப்பதாகவும், போலீஸ் வட்டார தகவல் தெரிவிக்கிறது.