கருவேலமரங்களை ஒழிக்க களமிறங்கிய மக்கள்: குடியிருப்பு பகுதிகள் தூய்மையாக மாறுது | மதுரை செய்திகள் | Dinamalar
கருவேலமரங்களை ஒழிக்க களமிறங்கிய மக்கள்: குடியிருப்பு பகுதிகள் தூய்மையாக மாறுது
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

18 ஜூலை
2016
10:36
பதிவு செய்த நாள்
ஜூலை 18,2016 01:29

மதுரை: மதுரையில் குடியிருப்பு பகுதிகளின் துாய்மையை காப்பாற்ற அரசை எதிர்பார்க்காமல், களத்தில் இறங்கி கருவேலமரங்களை ஒழித்து குடியிருப்பு பகுதிகளை துாய்மையாக்கி உள்ளனர் எல்லீஸ்நகரின் ஒருபகுதியை சேர்ந்த மக்கள்.


ரோட்டில் தனி மனிதனால் வீசி எறியப்படும் குப்பையை கூட பொறுக்க அரசை

நம்பியிருக்கும் எண்ணம் மக்களின் மனங்களில் வளர்ந்து வருகிறது. இதனால் நகரின் துாய்மை என்பது குப்பைகளாய் காற்றில் பறந்து வருகிறது.


அதேசமயம், பொதுநலம் என்ற நல்லெண்ணம் சிலரிடம் இருப்பதால் கண்மாய்கள் மீட்பு, மரங்கள் வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பணிகளும் நடந்து வருகின்றன. அந்த

பட்டியலில் எல்லீஸ்நகர் வீட்டுவசதி வாரிய டி, எம் டைப் வீடுகளின் குடியிருப்பு மக்களும் இடம்பெற்றுள்ளனர்.


இப்பகுதியில் 300 குடியிருப்புகள் உள்ளன. இதன் மையப்பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பு காலியாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் போலீஸ் குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் பூங்கா அமைக்க வேண்டும் என குடியிருப்பு மக்கள் வலியுறுத்தினர். பல காரணங்களால் அந்த பகுதி முழுவதும் கருவேலமரங்கள் நிறைந்து புதர்மண்டி

கிடந்தது. இதனால் பலவிதங்களில் பாதிக்கப்பட்ட மக்கள், அந்த இடம் முழுவதையும் துாய்மை செய்ய அரசுத்துறைகளிடம் சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.


எந்த பயனும் இல்லாததால் அவர்களாகவே இணைந்து நிதி திரட்டி அந்த பகுதி

முழுவதையும் துாய்மைப்படுத்தினர்.இந்த பகுதி மக்களை போன்று நகரில் பல

இடங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதிகளில் இணைந்து செயல்பட்டால் தான் துாய்மையான மதுரையை உருவாக்க முடியும்.


பொறுத்தது போதும்

கருவேலமரங்களால் நிலத்தடி நீர் கிடைக்கவில்லை. வீட்டைவிட்டு வெளியே மக்கள் அச்சத்துடன் நடக்கவேண்டிய நிலை இருந்தது. அதிகாரிகளிடம் துாய்மைபடுத்த கால்கடுக்க நடந்து தான் மிச்சம். அதனால் எங்கள் மக்களாக கூடி, நாங்களே துாய்மை செய்வது என முடிவு செய்தோம்.

இதற்காக மண் அள்ளும் இயந்திரம் ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தி துாய்மைப்படுத்தி விட்டோம். தொடர்ந்து சுற்றுச்சூழல் கேடு இல்லாமல் பாதுகாப்போம்.

சண்முகசாமி, எல்லீஸ்நகர் மேற்குபகுதி குடியிருப்போர் நலச்சங்க தலைவர்


வழிகாட்டிய தினமலர்

இந்த பகுதி புதர்மண்டி கிடந்ததால் பாம்புகளின் பண்ணையாக மாறிவிட்டது. வீடுகளில் பாம்புகள் வலம் வரத்துவங்கின. முத்துப்பட்டி கண்மாயில் உள்ள கருவேலமரங்களை பொதுமக்கள் அகற்றிய செய்தியை தினமலர் நாளிதழில் பார்த்தோம். அதே போன்று இங்கும் தொடருவோம் என முடிவு செய்து இப்பணியில் இறங்கினோம்.

நாராயணன், சங்க உறுப்பினர்


பூங்காற்று வீசுமா

கொசு, பாம்பு, விஷபூச்சிகள் தொல்லைகள் ஒருபுறம். புதர்மண்டிய பகுதிகளில் சமூக விரோத செயல்கள் மறுபுறம், என குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இங்கிருந்த புதர்மண்டிய பகுதி தொல்லையாக இருந்தது. எல்லோரும் இணைந்து அதை அகற்றியதால் அனைவருக்கும் மகிழ்ச்சி. இதை ஒரு பூங்காவாக மாற்றி எல்லோரும் பயன்படும் விதத்தில் மாற்ற வேண்டும்.

ஷர்மிளாபானு, குடும்பத் தலைவி

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X