மதுரை, மதுரை நீதிமன்றம் முதல் உயர்நீதிமன்றம் வரை சீமைக் கருவேல மரங்களை அகற்ற
மாநகராட்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் மேயர் பட்டுராஜன் (அ.தி.மு.க.,),'சீமைக் கருவேல மரங்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதன் வேர்கள் 175 அடி ஆழம் வரை ஊடுருவுகின்றன. நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது. மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற மாநகராட்சி, பொதுப்பணித்துறை, வனத்துறைக்கு உத்தரவிட வேண்டும்,' என மனு செய்திருந்தார்.நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் கொண்ட அமர்வு விசாரித்தது. மாநகராட்சி கமிஷனர் சந்தீப் நந்துாரி ஆஜரானார்.
மாநகராட்சி வழக்கறிஞர்: ஏற்கனவே இதுபோன்ற வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, மதுரையில் பூங்காக்கள், மைதானங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் சீமைக் கருவேல மரங்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியுள்ளது. கண்மாய்கள், நீர்நிலைகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில்
உள்ளதால், அகற்ற அவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் நிலத்திலுள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கான திட்டம் உள்ளது.
மனுதாரர்: மதுரை நீதிமன்றத்திலிருந்து உயர்நீதிமன்றம் வரை இருபுறமும் சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன.
நீதிபதிகள்: முதற்கட்டமாக மதுரை நீதிமன்றத்திலிருந்து உயர்
நீதிமன்றம் வரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சீமைக் கருவேல மரங்களை அகற்றி, மாநகராட்சி கமிஷனர் டிச.,14 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என்றனர்.
மேயராக இருந்தபோது
என்ன செய்தீர்கள்
இவ்வழக்கு விசாரணையின்போது மனுதாரரை நோக்கி குறுக்கிட்ட நீதிபதி ஏ.செல்வம்,
'நீங்கள் மேயராக இருந்தபோது, நான் மதுரை சட்டக் கல்லுாரியில் படித்தேன். அப்போது சீமைக் கருவேல மரங்களை அகற்ற என்ன
செய்தீர்கள்?,' என கேள்வி எழுப்பினார்.
பட்டுராஜன், “அப்போது சீமைக் கருவேல மரங்கள் இல்லை. சிறிய கன்றுகளாக
இருந்தன,” என்றார்.
நீதிபதி ஏ.செல்வம், “சிறிய கன்றுகளாக
இருந்தபோதே அகற்றியிருந்தால், இப்போது பெரிய அளவில் வளர்ந்திருக்காதே!,” என்றார்.