கோவை திரைபட இயக்கம் சார்பில், அரையாண்டு தேர்வு பள்ளி விடுமுறையை முன்னிட்டு, சிறுவர்களுக்கான திரைப்பட விழா இன்று துவங்குகிறது. புத்தாண்டு வரை தொடச்சியாக, 10 நாட்கள், 10 நாடுகளின், 10 திரைப்படங்கள், இலவசமாக திரையிடப்படுகின்றன.
கதைச் சுருக்கம்:கொஞ்சம் செழிப்பும், அதிக வறட்சியும் உள்ள ஆப்ரிக்க வனப்பகுதியில், 'புஷ் மேன்' என்ற ஆதிவாசி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் நாகரிகத்தின் தாக்கமின்றி இயற்கையோடு இயைந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.ஒரு சிறிய விமானத்தை ஓட்டி வரும் விமானி, 'கோகோ கோலா' பானத்தை குடித்துவிட்டு, அதன் காலி பாட்டிலை காட்டுக்குள் வீசி செல்கிறான்.
வானத்திலிருந்து விழுந்த 'கோகோ கோலா' பாட்டிலை கடவுள் கொடுத்த பரிசாக எண்ணி அந்த பழங்குடி மக்கள் மகிழ்கின்றனர். அந்த பாட்டிலை வைத்து சிறுவர்கள் விளையாடுகின்றனர். பெரியவர்கள் பாட்டில் வாயில் வைத்து ஊதி இசையெழுப்புகிறார்கள். இடிப்பதற்கும், அரைப்பதற்கும் பெண்கள் அதை பயன்படுத்துகின்றனர். அந்த காலிப்பாட்டில் அவர்கள் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாக மாறி விடுகிறது.
ஒவ்வோருவரும் அந்த பாட்டிலை தனக்கே சொந்தமாக்கி கொள்ள விரும்புகின்றனர். சுயநலம் பிறந்ததும், சகோதர சகோதரிகளிடம் பொறாமை, வஞ்சம், கோபம், வன்முறை ஆகியவைகளும் வந்து விடுகின்றன. அந்த பாட்டிலுக்காக ஒருத்தருக்கு ஒருத்தர் அடித்துக் கொண்டு உருள்கின்றனர்.கள்ளம் கபடம் இல்லாமல் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடையே இந்த பாட்டில் பிரிவினையை உண்டாக்கி ஒற்றுமையை குழைக்கிறது.அதனால், இந்த பாட்டிலை திரும்ப கடவுளிடமே அனுப்ப பெரியவர்கள் முடிவு செய்து பாட்டிலை வானத்தை நோக்கி வீசுகின்றனர்.
அது திரும்ப கீழே விழுந்து சிலரது தலையை பதம் பார்க்கிறது. எனவே, அதை குழி தோண்டி புதைக்கின்றனர்.ஆனால், ஒரு கழுதைப்புலி அதை தோண்டி எடுத்து வெளியில் போட்டு விடுகிறது. அதைக்கண்டெடுத்த சிறுவர்கள் உரிமை கொண்டாடி மீண்டும் அடித்து கொள்கின்றனர்.காற்று, நீர், மரம் என அனைத்தும் கடவுள் நமக்கு வரமாக தந்தது. இது அவர் ஞாபகமறதியாக தந்த 'தீய பொருள்' என கருதி அதை உலகத்தின் கடைசி பாகத்தில் துாக்கியெறிந்துவிட்டு வர திட்டமிடுகின்றனர். இத்திட்டத்தை நிறைவேற்ற ஒருவன் புறப்பட்டுச்செல்கிறான்.திட்டத்தை நிறைவேற்ற அவன் படும் சிரமங்களை காட்சியாக்கி திரைக்கதை பயணிக்கிறது. 'கோகோ கோலா' காலி பாட்டிலை அவனால் தொலைக்க முடிந்ததா? அவன் என்ன செய்தான் என்பதுதான் படத்தின் முடிவு.
காட்சிக்கு காட்சி வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் இப்படத்தை கோவை திரைப்பட இயக்கம் இன்று மாலை 5:30 மணிக்கு, மேட்டுப்பாளையம்ரோடு, துடியலுார் ஸ்டேட் பேங்க் கிளை எதிரில் உள்ள உயிர் சக்தி யோகா மையம் அரங்கில் இலவசமாக திரையிடுகிறது. சிறுவர்களுக்கு இலவசம். பெரியவர்கள் பார்க்க விரும்பினால், 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.விழாவை, சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் புவியரசு துவக்கி வைக்கிறார். எழுத்தாளர் க.வை.பழனிசாமி தலைமை வகிக்கிறார்.