தர்மபுரி: 'தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உலகளவில் பெரிய கற்கால புதிர் நிலையை பாதுகாக்க வேண்டும்' என, மாவட்ட நிர்வாகத்துக்கு வரலாற்று ஆர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து புதிர் நிலையை கண்டறிந்த வரலாற்று ஆய்வாளர் சுகவன முருகன் கூறியதாவது. புதிய கற்க்காலத்திலிருந்தே புதிர்நிலைகள் உலகம் முழுக்க இருந்ததை தொல்லியல் ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். உலகிலேயே ஸ்காண்டிநோவியா நாட்டில் தான், அதிக புதிர் நிலைகள் கண்டுபிடிக்கபட்டுள்ளன. அவை , 300 மற்றும், 600 ஆண்டுகள் பழைமையானவை. கிரேக்கத்தில் பைலோஸ் என்ற இடத்தில் கிடைத்த சுடுமண் தட்டு ஒன்றில் வரையப்பட்டுள்ள, சதுர புதிர் நிலை போன்ற புதிர்நிலை, தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்த வெதரம்பட்டியில் இன்றளவும் உள்ளது, உலகின் பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களை அதிசயிக்க வைத்துள்ளது. புதிர் நிலை என்பது, ஒரு பெண்ணின் வயிற்று பகுதியாகவும், அதன் வெளி பகுதி குழந்தை பிறக்கும் பகுதியாக மக்கள் கருதுகின்றனர். குழந்தைகள் சுகபிரசவமாக பிறக்கவும், அக்குழந்தை ஆரோக்கியமாக வளரவும் புதிர்நிலைகளை மக்கள் வழிபட்டு இருந்துள்ளனர். இந்தியாவில், இதிகாச காலமான மகாபாரத்தில் யுத்தப் புதிர் நிலை ஒன்றில் அபிமன்யூ சிக்கிக் கொள்கிறான். அதே போல் மாகாபாரத போர் நடந்த குருஷேத்திரத்தில் உள்ள காளிக்கோவிலில் இதே போல் சிறிய புதிர் நிலை உள்ளது. பாண்டவர்கள் யுத்தத்திற்கு போவதற்கு முன், அங்குள்ள அனைத்து புதிர் நிலைகளை பற்றி தெரிந்து கொண்டே யுத்தித்திற்கு சென்றனர் என்பதை வரலாறு மூலம் நினைவு கூறலாம்.
இந்தியாவிலே கோவாவில், பாறை ஒன்றில் வட்ட புதிர் நிலை உள்ளது. ஆனால், அந்த புதிர் நிலை மிகவும் சிறியது.தர்மபுரி மாவட்டம் வெதரம்பட்டியில் உள்ள புதிர் நிலை, 1,600 சதுர அடி பரப்பளவில் உலகத்திலே மிகவும் பெரியதாக உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிர் நிலை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் ஆசிரியர்கள், வெதரம்பட்டியில் உள்ள புதிர்நிலை பகுதிக்கு அழைத்து வந்து, இதன் பெருமையை உணர்த்தலாம். மேலும், விவசாய நிலம் அருகே உள்ள புதிர்நிலையை அழியாமல் இருக்கவும், பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.