| ஓசூர் அருகே வவ்வால்களை நேசிக்கும் கிராமம் Dinamalar
ஓசூர் அருகே வவ்வால்களை நேசிக்கும் கிராமம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

30 செப்
2017
10:14

ஓசூர்: ஓசூர் அருகே உள்ள கொலதாசபுரம் கிராம மக்கள், 300 ஆண்டுக்கு மேலாக வவ்வால்களை நேசித்து வருகின்றனர். தீபாவளி சமயத்தில் மட்டுமல்ல, மற்ற நாட்களில் கூட, வவ்வால்கள் வசிக்கும் பகுதியில் பட்டாசுகளை வெடிப்பதில்லை.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலூர் அருகே உள்ள கொலதாசபுரம் கிராமத்தின் மைய பகுதியில் ஏரி அமைந்துள்ளது. இதன் கரையோரத்தில் மா மரங்கள் உள்ளன. இதில், நூற்றுக்கணக்கான வவ்வால்கள் வசித்து வருகின்றன. வவ்வால்கள் இருப்பதால் தான் தங்கள் கிராமம், நோய், நொடியின்றி இருப்பதாக நம்பிய கொலதாசபுரம் கிராமத்தில் வாழ்ந்த முதாதையர்கள், அந்த காலத்தில் இருந்தே, வவ்வால்களை துன்புறுத்தாமல் நேசிக்க பழகினர். வவ்வால்களும் கிராமத்திற்குள் சென்று மக்களை தொந்தரவு செய்வதில்லை. இப்படி, மனிதன் - வவ்வால் இடையே ஏற்பட்ட நெருக்கத்தால், தீபாவளி மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் கூட, கொலதாசபுரம் கிராம மக்கள் வவ்வால்களை பயமுறுத்தும் வகையில் பட்டாசு வெடிப்பதில்லை. ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள ஏரிக்கரை மரங்களில் வவ்வால்கள் வசிப்பதால், அவற்றிற்கு தொந்தரவு கொடுக்காமல், தங்களது வீட்டின் அருகேயே சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரும் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடுகின்றனர்.



கடந்த, 20 ஆண்டுக்கு முன், நோய்வாய்ப்பட்ட தன் குழந்தையில் உடல் நிலை சரியாக, வவ்வால் ரத்தம் வேண்டும் என்பதற்காக, கொலதாசபுரம் பகுதியில் உள்ள வவ்வால்களை சுட்டு, அதை எடுத்து சென்ற நபர் விபத்தில் உயிரிழந்தார். அதேபோல் வவ்வால்களை துன்புறுத்தும் நபர்கள் வீடுகளில், அசம்பாவிதம் நடப்பதாக நம்பப்படுகிறது. இதனால் கொலதாசபுரம் கிராம மக்கள், 300 ஆண்டுக்கும் மேலாக வவ்வால்களுடன் நெருக்கம் காட்டி வருகின்றனர். வவ்வால்களை வேட்டையாடும் நோக்கில் வரும் மனிதர்களை கூட மக்கள் விரட்டி அடிக்கின்றனர். வவ்வால்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில், மா மரங்களில் ஏறி யாரும் மாங்கனிகளை பறிப்பதில்லை. இப்படி வவ்வால்களை தங்களது கிராமத்தின் சொத்தாக பாதுகாத்து வரும் மக்கள், அவற்றை கடவுளாக பாவித்து வருவது தொடர்கிறது என்றால் ஆச்சர்யமாக தான் உள்ளது.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X