| அமலாபால் கார் விவகாரத்தில் விதிமுறை மீறல் இல்லை Dinamalar
அமலாபால் கார் விவகாரத்தில் விதிமுறை மீறல் இல்லை
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 நவ
2017
07:09

புதுச்சேரி, நவ. 1-

நடிகை அமலாபால் கார் வாங்கிய விவகாரத்தில், விதிமுறைகள் மீறப்படவில்லை என, புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான் கூறினார்.

இது குறித்து அவர் நேற்று கூறியதாவது:

நடிகை அமலா பால் கர்நாடகாவில் பென்ஸ் கார் வாங்கியுள்ளார். சட்ட ரீதியாக கர்நாடகாவில் தற்காலிக பதிவெண் பெற்று, புதுச்சேரிக்கு எடுத்து வந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி பதிவு செய்ய விண்ணப்பித்தார்.

போக்குவரத்துத் துறை சட்டவிதிகள் படி, வாகனத்தை பதிவு, வாக்காளர் அடையாள அட்டை, எல்.ஐ.சி., பாலிசி உள்ளிட்டவை தாக்கல் செய்யலாம். இது இருப்பிடத்தை உறுதி செய்யும்.

அமலாபால், தனது கையெழுத்துடன் கூடிய அபிடவிட்டை தாக்கல் செய்தார். திலாசுபேட்டையில், வாடகை வீட்டில் இருப்பதற்கான இருப்பிட சான்று தாக்கல் செய்துள்ளார். அத்துடன் எல்.ஐ.சி., பாலிசியும் இம்முகவரியில் தந்துள்ளார்.

இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வாகனம் வாங்கலாம். கர்நாடகத்தில் வாகனம் வாங்கி தற்காலிக பதிவெண் பெற்று, புதுச்சேரியில் நிரந்தர பதிவெண் பெற்றார். இங்கிருந்து வேறு மாநிலத்துக்கு சென்றால், அந்த மாநிலத்தில் பதிவெண் பெற ஓராண்டு கால அவகாசம் உள்ளது.

தற்போது போலீஸ் சீனியர் எஸ்.பி., ராஜிவ் ரஞ்சன் தலைமையிலான குழு, இருப்பிடத்திற்கு சென்று விசாரித்தது. அதில் தவறு இல்லை என்று தெரிந்தது. துறை ரீதியாக தவறு ஏதும் நடக்கவில்லை. அனைத்தும் சட்டரீதியாக நடந்துள்ளது. கேரள அரசு தகவல் கேட்டால் தர தயாராக இருக்கிறோம்.

ஓராண்டுக்குள் பதிவெண் பெறாவிட்டால், அந்த மாநில அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவர்னர் எந்த நோக்கில் குற்றம் சாட்டினார் என தெரியவில்லை. கார் பதிவு செய்ததற்கு அனைத்து ஆவணங்களும் இருக்கின்றன. அமலாபால் வாகனம் பதிவு செய்து இரண்டரை மாதங்கள் மட்டுமே

ஆகிறது.

வேறு மாநிலத்தில் கார் இயக்கினால், அங்கு பதிவு செய்ய மேலும் 8 மாதங்களுக்கு மேல் கால அவகாசம் இருக்கிறது.

புதுச்சேரியில் வரி குறைவு என்பது அந்தந்த மாநிலம் எடுக்கும் முடிவு. பெட்ரோல், டீசல், மதுபானங்கள் இங்கு விலை குறைவு. மாநில வருவாய்க்காக வரியை குறைத்து வைத்துள்ளோம். அதில் தவறு இல்லை. சாலை வரி ஜி.எஸ்.டி.,யில் வரவில்லை.

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை குறைவு என்பதால், வெளிமாநில வாகனங்களும் இங்கு எரிபொருள் நிரப்பி செல்கின்றன. அது தவறு என கூற இயலாது.

போலி முகவரி என்று ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுப்போம். அமலாபால் விவகாரத்தில் தங்கும் இடத்துக்கான சான்று தரப்பட்டுள்ளது. ஒருவர் அளிக்கும் முகவரி சான்றுகளை போக்குவரத்துத்துறை பரிசோதனை செய்ய இயலாது. வாகனம் பதிவு செய்வோர், முகவரியை ஆய்வு செய்ய வேண்டியதில்லை. மத்திய அரசின் சட்டப்படியே செயல்படுகிறோம். வாகன பதிவு முகவரியில் ஆதார் இணைக்க வேண்டும் என போக்குவரத்து சட்டவிதியில் இல்லை.

மாதம் தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களும், 650 கார்களும் பதிவு செய்யப்படுகிறது. ஆம்னி பஸ்களுக்கு, ஒரு சீட்டுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஒரு இருக்கைக்கு ரூ. 1,200 செலுத்த வேண்டும்.

கவர்னரிடம் 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்வோம். தவறு நடந்ததாக கூறுவது மாயை. தனிப்பட்ட முறையில் கவர்னருடன் மோதலில்லை. இது தொடர்பான முழு தகவல்கள் கேட்டால் உடன் அனுப்புவோம்.

இவ்வாறு அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X