திருநெல்வேலி:பாளை.யில் கை,கால்கள் கட்டப்பட்டு தலையணையால் முகத்தை அமுக்கி பாதிரியார் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நெல்லை பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தை சேர்ந்தவர் அமலன்(54). பாளை.கத்தோலிக்க மறைமாவட்ட குடும்பநல பணிக்குழு செயலாளர். இவர் சாந்திநகர் குழந்தை ஏசு ஆலய வளாகத்தில் உள்ள ஜூப்ளி அருட்பணி இல்லத்தில் தங்கி பணியாற்றி வந்தார். கடந்த 14ம் தேதி அமலன் தனது பெற்றோருடன் செல்போனில் பேசினார். அதன்பின் அவர் யாருடனும் பேசவில்லை. இந்நிலையில் நேற்று காலை அவரது அறையை சுத்தம் செய்வதற்காக அங்குள்ள பணியார் ஒருவர் சென்றார். அறையின் அருகே சென்றபோது துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அந்த பணியாளர் ஆலய நிர்வாகத்தினரிடம் தெரிவித்தார். இதுகுறித்து ஆலய நிர்வாகத்தினர் பாளை.போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அறையை உடைத்து உள்ளே சென்றனர். அங்குள்ள கட்டிலில் பாதிரியார் அமலனின் கை, கால்கள் கட்டப்பட்டு, தலையணயால் முகம் அமுக்கப்பட்ட நிலையில் நிர்வாண கோலத்தில் அழுகிய நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து பாளை.போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளை.ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் தொடர்பாக பாளை.இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர். பாதிரியார் அமலனுக்கு நெருக்கமானவர்களே இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனினும் இன்று(17ம் தேதி) பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.