வண்டிப்பேட்டை... வசூல் வேட்டை!மருதமலை அடிவாரத்தில் கட்டண கொள்ளை: மக்கள் குமுறினாலும் கண்டு கொள்வாரில்லை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2018
23:57

மருதமலை:மருதமலை வண்டிப்பேட்டையில், 'பார்க்கிங்' என்ற பெயரில் நடக்கும் கட்டணக் கொள்ளையை, அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பது, பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முருகனின் ஏழாம் படைவீடாக போற்றப்படும் மருதமலை கோவில், தமிழகத்தின் பிரசித்தி பெற்ற தலங்களில் மிக முக்கியமானது. இக்கோவிலுக்கு, வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் தினமும் பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கேரளா எல்லைக்கு அருகில் இருப்பதால், சபரிமலைக்கு செல்லும் பக்தர்களும், தவறாது இங்கு வந்து, முருகனை தரிசித்துச் செல்கின்றனர்.
உச்சம் தொட்ட ஏலம்!
அந்த வகையில், நாள்தோறும் நுாற்றுக்கணக்கான வேன்கள், பஸ்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள், மருதமலைக்கு வருகின்றன. இந்த வாகனங்கள், மருதமலை அடிவாரத்தில் உள்ள வண்டிப்பேட்டையில் நிறுத்தப்படுகின்றன. இந்த இடம், சோமையம்பாளையம் கிராம ஊராட்சி மற்றும் மருதமலை தேவஸ்தானத்திற்கும் சொந்தமானது. இங்கு வாகனங்களை நிறுத்துவோரிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமம், ஆண்டுதோறும் ஏலம் விடப்படுகிறது.சோமையம்பாளையம் ஊராட்சி மற்றும் மருதமலை தேவஸ்தானம் இணைந்து இந்த ஏலத்தை நடத்துகின்றன. இந்தாண்டுக்கான ஏலம், கடந்த டிச., 10ல், சோமையம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்தது. வழக்கமாக, 13 லட்சம் ரூபாய் வரை போகும் ஏலம், இந்தாண்டு போட்டியில், 29 லட்சம் ரூபாய் என, புதிய உச்சத்தைத் தொட்டது. குமார் என்பவர், வண்டிப்பேட்டை ஏலத்தை எடுத்துள்ளார்.
வண்டிப்பேட்டை ஏலதாரருக்கான விதிமுறைகளை சோமையம்பாளையம் ஊராட்சி மன்றமும், இந்து அறநிலையத்துறையும் உருவாக்கியுள்ளது. அதில் முக்கியமானது, 'வண்டிப்பேட்டைக் கட்டணம் வசூலிக்க ஏலம் எடுத்தவர்கள் ஏல நிபந்தனைகளில் கண்டுள்ளபடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தொகையை குறிப்பிட்டு ரசீதுகள் அச்சிட்டு, ஊராட்சி மற்றும் திருக்கோவில் முத்திரையிட்ட பின்னர்தான் கட்டணம் வசூலிக்க வேண்டும்' என்பதாகும்.
நிர்ணயித்த தொகைக்கு அதிகப்படியாக கட்டணம் வசூல் செய்தால், உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், ஏலத்துக்குச் செலுத்திய டேவணித் தொகையும் பறிமுதல் செய்யப்படும் என்றும் நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் மறு ஏலம் நடத்தும் செலவையும், அதனால் ஏற்படும் நஷ்டத்தையும் இவரே ஏற்க வேண்டும் என்பதும் அதிலுள்ள முக்கியமான ஷரத்தாகும்.
ஊராட்சி மன்றம் மற்றும் தேவஸ்தானம் நிர்ணயித்தபடி, பஸ், லாரி, வேன் மற்றும் டிராக்டர்களுக்கு, 100 ரூபாயும், ஸ்கூட்டர், பைக் போன்ற டூ வீலர்களுக்கு, 10 ரூபாயும், ஆட்டோவிற்கு, 15 ரூபாயும், டூரிஸ்ட் பஸ்களுக்கு, 150 ரூபாயும், கார்களுக்கு, 35 ரூபாயும், சைக்கிள், மாட்டுவண்டிகளுக்கு, 2 ரூபாயும் வசூலிக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டில் புதிய ஏலதாரர், பொறுப்பில் எடுத்த நாளில் இருந்தே, வண்டிப்பேட்டையில் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அத்துமீறலுக்கு அறிவிப்பு!
அதாவது, லாரி, பஸ்களுக்கு, 200 ரூபாயும், வேன், மினிபஸ்களுக்கு, 150 ரூபாயும், ஆட்டோ, கார்களுக்கு, 50 ரூபாயும் வசூலித்து வருகின்றனர். இதில் கொடுமை என்னவென்றால், கூடுதலாக வசூலிக்கும் கட்டணத்தை, பகிரங்கமாக, 'பிளக்ஸ் போர்டு' அடித்தே வசூலிக்கின்றனர் என்பதுதான். கண்ணெதிரே நடக்கும் கட்டணக் கொள்ளையை, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளோ, தேவஸ்தான அதிகாரிகளோ கண்டு கொள்ளவே இல்லை.கூடுதல் கட்டணம் வசூலிப்பதை அறிந்து, கேள்வி கேட்கும் வாகனதாரர்கள், மிரட்டப்படுகின்றனர். பெரும்பாலும் வெளியூர்க்காரர்கள் என்பதால், கடும் அதிருப்தியுடன், கேட்ட தொகையை கொடுத்துச் செல்கின்றனர்.
டூரிஸ்ட் பஸ் ஓட்டும் வெளியூர் டிரைவர் ஒருவர் கூறுகையில், 'கேரளா, ஆந்திரா என பல மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கும் செல்கிறோம்; இந்த அளவுக்கு எங்குமே, 'பார்க்கிங்' கட்டணம் வசூலிப்பதில்லை' என்றார்.
பொதுமக்கள் கூறுகையில், 'அதிக கட்டணம் வசூலிப்பது தெரிந்தும், இன்று வரை அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை நோட்டீஸ் கூட அதிகாரிகள் அனுப்பவில்லை. அநியாய கட்டணம் வசூலிப்பதை அங்கீகரிக்கும் வகையில், வண்டிப்பேட்டை கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம் நிறைவேற்றவும் முயற்சி நடக்கிறது. போட்டியில், அதிக தொகைக்கு ஏலம் எடுத்து விட்டு, அந்த பணத்தை எடுப்பதற்கு பக்தர்களின் தலையில் கைவைப்பது, அநியாயமானது' என்கின்றனர்.பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) ராஜனிடம் கேட்டபோது, ''கட்டணம் அதிகப்படுத்தி வாங்க, ஏலம் எடுத்தவர் கேட்டிருந்தார்.
''பரிந்துரையை கலெக்டரிடம் அனுப்பி இருக்கிறோம்,'' என, மழுப்பலாக பதில் கூறி தொடர்பை துண்டித்தார். அதிகாரிகள் அமைதி காப்பதைப் பார்த்தால், இந்த கட்டணக்கொள்ளையில், அவர்களுக்கும், 'பங்கு' இருக்கிறதோ என்ற சந்தேகமே வலுக்கிறது.
இது, 'உள் கொள்ளை!'
வண்டிப்பேட்டையில் வேலை பார்ப்போர், அதிக கூட்டம் வரும்போது மின்னணு பில் இயந்திரத்தில் உள்ள, 'இன்க்'கை மாற்றி குறைவான, 'இன்க்' உள்ளதை பயன்படுத்துகின்றனர். இதனால் ரசீது, வெறும் வெள்ளைத் தாளாக வருகிறது. இதை கார், பஸ்களுக்கு வினியோகித்து, 200 ரூபாய் வாங்கிக்கொண்டு, 'டூ வீலர்'களுக்குத் தர வேண்டிய, 10 ரூபாயை மட்டும் கணக்கு காட்டி விடுகின்றனர்; பக்தர்களிடம் பகல் கொள்ளை அடிப்போரிடம் நடக்கும், 'உள்கொள்ளை' இது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
23-ஜன-201809:07:47 IST Report Abuse
Amirthalingam Sinniah கோபுர தரிசனம் கோடிபுண்ணியம். தூரத்தில் நின்று கும்பிடலாம்தானே.
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
23-ஜன-201806:57:47 IST Report Abuse
Siva சிவன் சொத்து குல நாசம் என்பதை அறியாதவர்கள்.ஐயோ பாவம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X