| அறுவடை பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை : விவசாயிகள் கடும் பாதிப்பு Dinamalar
அறுவடை பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை : விவசாயிகள் கடும் பாதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 மார்
2011
21:27

சேத்தியாத்தோப்பு : நெல் அறுவடை மற்றும் கரும்பு வெட்ட தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக விவசாய பணிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. நாட்டின் முதுகெலும்பான விவசாயம் முழுக்க, முழுக்க தொழிலாளர்களை மட்டுமே நம்பியுள்ளது. என்னதான் நவீன ரக இயந்திரங்கள், தொழில் நுட்பங்கள் வேளாண் துறையில் பயன்படுத்தப்பட்டாலும் தொழிலாளர்கள் இல்லாமல் விவசாயம் இல்லை என்பது தான் உண்மை. இந்நிலையில் இந்த ஆண்டு சம்பா பருவ அறுவடை, கரும்பு வெட்டும் பணி ஆகியவற்றிற்கு தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக அறுவடை பணிகள் பாதிப்பிற்குள்ளானது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை சம்பளம் பெற்று வந்த விவசாய தொழிலாளர்களை தற்போது வேலைக்கு அழைத்தால் அவர்கள் விதிக்கும் நிபந்தனைகள் விவசாயிகளை திக்கு முக்காட வைக்கிறது. நாள் ஒன்றுக்கு 150 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை சம்பளம், காலை 11 மணிக்கு 2 பன்னுடன் டீ, மதியம் 3 மணிக்கு 2 வடை, 2 பஜ்ஜி, 2 போன்டா இவற்றில் ஏதாவது ஒன்றும் டீயும் அவசியம் வாங்கித் தர வேண்டும். இதைவிட முக்கியமாக சம்பளத்தை வேண்டுமானாலும் மறுதினம் கொடுக்கலாம். அவசியமாக 70 ரூபாய் மதிப்புள்ள குவாட்டர் பாட்டில் கண்டிப்பாக வாங்கித்தர வேண்டும். குடிப்பழக்கம் அல்லாதவருக்கும் குவாட்டர் பாட்டில் கொடுத்துவிட வேண்டும். அவர் வேண்டுமானால் சக தொழிலாளியிடம் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளலாம். தவிர குவாட்டருக்கு உரிய பணத்தை கொடுக்கும் உரிமை விவசாயிக்கு இல்லை. இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டாலும் கூட ஆட்களை ஒன்று சேர்க்க குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது ஆகும். கிடைக்கும் தொழிலாளர்களை தக்க வைக்க தங்கள் சுயமரியாதையை இழந்து டாஸ்மாக் கடைக்குச் சென்று பாட்டில் வாங்க வேண்டியுள்ளது என குடிப்பழக்கம் இல்லாத விவசாயிகள் குமுறுகின்றனர். இந்த அவல நிலைக்கு வேலை உறுதியளிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது தான் காரணம் என்கின்றனர் விவசாயிகள். காலை 8 மணிக்கு சென்று கைரேகை வைத்து விட்டு பெயரளவிற்கு வேலை செய்ததாக கணக்கு காட்டி வீட்டிற்கு வந்து விட்டால் ஊராட்சி எழுத்தர் மூலம் 100 ரூபாய் வீடு தேடி வரும்போது வயல் வெளியில் வாட்டத்துடன் யார்தான் வேலை செய்ய முன்வருவார்கள் என விவசாய தொழிலாளர்களே கூறுகின்றனர். ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்த வேலை உறுதியளிப்பு திட்டம் உழைக்கும் மக்களை உற்சாகப்படுத்துவதற்கு பதிலாக அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் முறையற்ற போக்கால் விவசாய தொழிலாளர்களை சோம்பேறிகளாக்கி வருகிறது. இந்த நிலையை மாற்றிட அண்டை மாநிலமான கேரளாவில் உள்ளதுபோல், வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களை விவசாய தொழிலிலும் ஈடுபடுத்த முன்னுரிமை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஒட்டு மொத்த விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.


 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X