கோவை, மாநில அளவிலான டேக்வோண்டோ போட்டி சண்டை பிரிவில், கோவை வீரர்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தி, 5 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.
தமிழ்நாடு டேக்வோண்டோ அசோசியேஷன் மற்றும் தேனி மாவட்ட டேக்வோண்டோ அசோசியேஷன் சார்பில், 31வது சப்- ஜூனியர் மற்றும் கேடட் மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான, டேக்வோண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள், தேனி மாவட்டம், எஸ்.சி.ஐ.எஸ்.எம்., மெட்ரிக் பள்ளியில் நடந்தன.
இதில், சென்னை, கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, மதுரை, திருநெல்வேலி, துாத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல், திருச்சி, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து, ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
சப்- ஜூனியர்களுக்கான, 35 கிலோ எடைபிரிவில், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மாணவி மதுமிதா; 50 கிலோவுக்கு மேற்பட்ட எடைபிரிவில், நேரு வித்யாலயா பள்ளி மாணவன் சஞ்சய்; கேடட், 29 கிலோ எடை பிரிவில், சவுடேஸ்வரி வித்யாலயா பள்ளி மாணவி தமிழ்இலக்கியா; கேடட், 37 கிலோ எடை பிரிவில், சி.எஸ்.ஐ., ஆண்கள் பள்ளி ஹரிகரசுதன்; 65 கிலோவுக்கு உட்பட்ட பிரிவில், சவுடேஸ்வரி வித்யாலயா பள்ளி மாணவன் அபிஜித் அத்மான் ஆகியோர் தங்க பதக்கங்களை தட்டி சென்றனர்.
சப்- ஜூனியர், 16 கிலோவுக்கு உட்பட்ட பிரிவில், எஸ்.பி.ஓ.ஏ., மிர்த்திகா ஸ்ரீ; 32 கிலோ பிரிவில் மில்டன் மெட்ரிக் பள்ளி சந்தோஷ்; கேடட் 65 கிலோவுக்கு உட்பட்ட பிரிவில், பி.பி.எம்., பள்ளி சித்தார்த் ராஜ் ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர்.
சப்- ஜூனியர், 32 கிலோவுக்கு உட்பட்ட பிரிவில் எஸ்.என்.எம்.வி., பள்ளி தேஜா ஸ்ரீ; 41 கிலோவுக்கு உட்பட்ட பிரிவு, மாரண்ண கவுடர் பள்ளி கிருஷ்ணா பிரகாஷ்; கேடட் 41 கிலோவுக்கு உட்பட்ட பிரிவு, தேர்முட்டி மாநகராட்சி பள்ளி ஸ்ரீ மகாநதியா; கேடட் 33 கிலோவுக்கு உட்பட்ட பிரிவு, கிக்கானி பள்ளி ஸ்ரீமதி; 53 கிலோவுக்கு உட்பட்ட பிரிவு, எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி ஸ்ரீவர்; 45 கிலோவுக்கு உட்பட்ட பிரிவு, மாரண்ண கவுடர் அபிலாஷகா ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர்.
போட்டியில் முதலிடத்தை பிடித்த மாணவ, மாணவியர் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.