ராமநாதபுரம்:ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள வளர் இளம் பருவத்தினரை நோய்களில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இடையீட்டு சேவை மைய கட்டடம் அமைக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது.
தேசிய சுகாதார இயக்கம் சார்பில் வளர் இளம் பருவத்தினர், நோய்களில் இருந்து பாதுகாக்க இடையீட்டு சேவை மையம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய்மதிப்பீட்டில் இந்த மையம் அமைக்கப்பட்டு, அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
பள்ளியில் ஆய்வுஆண்டு தோறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களை டாக்டர் பொதுவாக முழு உடல் பரிசோதனை செய்கின்றனர். அதில் குறைபாடுகள், நோய்கள் உள்ள வளர் இளம் பருவத்தினை அடையாளம் கண்டு சிறு வயதிலேயே நோய்களில் பாதிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதில் மேல் சிகிச்சை தேவைப்படும் கிராமப்புற மாணவர்களுக்கு அப்பகுதியில் உள்ள சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் ராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
சிகிச்சை வசதிகள்
மாணவர்களுக்கு தேவையான சிறப்பு மருத்துவர்களான இருதயம், பிசியோதெரபி, கண், பல், காது, மூக்கு, தொண்டை, அறுவை சிகிச்சை மருத்துவர்கள், மாணவர்களுக்கு பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்குவார்கள், இதற்கு தேவையான ஸ்கேன், உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடையீட்டு சேவை மையத்தில் உள்ளன.
பள்ளி மாணவர்கள் வாரத்தில் திங்கள், சனிக்கிழமைகளில் இடையீட்டு சேவை மையத்திற்கு அழைத்து வரப்பட்டு, தொடர் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காத்திருப்பு
உயர் தர சிகிச்சை தற்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தாலும், அவர்களுக்கென வழங்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடம் கட்டப்பட்டு உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படாமல் இருந்தது. தற்போது ஒப்படைக்கப்பட்டு மூன்று மாதங்களாக பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
இதனை திறக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மாணவர்கள் உரிய சிகிச்சை வழங்கிட பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.சுகாதாரத்துணை இயக்குனர் குமரகுருபன் கூறுகையில், ''தற்போது மாணவர்களுக்கு தேவையான உயர் தர தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு சமீபத்தில் தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் திறப்பதற்காக அவரிடம் தேதி கேட்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்திற்குள் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்,'' என்றார்.