| மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளில், 'கொர்' ஆங்காங்கே உயிரிழப்பு ஏற்பட்டும் திருந்தாத மின் வாரிய அதிகாரிகள் Dinamalar
மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளில், 'கொர்' ஆங்காங்கே உயிரிழப்பு ஏற்பட்டும் திருந்தாத மின் வாரிய அதிகாரிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 செப்
2018
00:28

வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்க உள்ள நிலையில், சென்னை முழுவதும், மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளில், மின் வாரியம் அக்கறை காட்டவில்லை என,

குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.வழக்கம் போல, இந்த ஆண்டும் மின் கசிவால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க, மின் வாரிய தலைவர் அதிரடி காட்டுவாரா, என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சென்னையில், சில இடங்களில், தரைக்கு அடியிலும், மற்ற இடங்களில், மின் கம்பம் வாயிலாக, மின் வாரியம், மின் கேபிளை கடத்திச் சென்று, மின் வினியோகம் செய்கிறது.மின் சாதனங்களை முறையாக பராமரிக்காததால், மழைக்காலங்களில், அவற்றில் ஏற்படும் மின் கசிவால், ன் விபத்து ஏற்படுகிறது. இதனால், அப்பாவி மக்கள் உயிரிழப்பது, சென்னையில் காலம் காலமாக தொடர்கிறது.அதன்படி, 2017 நவம்பவரில், சென்னை, கொடுங்கையூரில், மின் விபத்தில் சிக்கி, இரு சிறுமியர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம், மின் வாரிய அலட்சியத்தை அம்பலப்படுத்தியது. நீதிமன்றமும், மின் வாரிய அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தது.இந்நிலையில், இந்தாண்டு வடகிழக்கு பருவமழை துவங்க, இன்னும் ஒன்றரை மாத காலமேஉள்ளது. இதனால், மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளை, முன்கூட்டியே செய்து முடிக்குமாறு, மின்வாரிய உயர் அதிகாரிகள், அந்தந்த பகுதி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டனர்.ஆனால், எந்த பகுதியிலும், இதுவரை முழுமையாக பணிகள் செய்யப்படவில்லை. ஒரு சில இடங்களில், கேபிள்கள் வெளியே தெரியும் படி, மிகவும் ஆபத்தாக உள்ளன.மின்பெட்டிகள் தாழ் வாகவே அமைந்துள்ளன. இவற்றால், மின்கசிவு ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.குறிப்பாக, வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை, ஆர்.கே.நகர், பெரம்பூர், ஓட்டேரி, புளியந்தோப்பு உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில், சேதமடைந்த மின் சாதனங்களை சீரமைக்கும் பணி, கண் துடைப்பிற்காக கூட நடக்கவில்லை என, புகார்கள் எழுந்துள்ளன.உதாரணமாக, சென்னை, கொருக்குப்பேட்டை, பாரதிநகர், 9வது தெருவில், குடியிருப்புக்கு முன், வெளியே தெரியும் வகையில், ஆபத்தாக சாலையிலேயே மின் கேபிள் கொண்டு செல்லப்படுகிறது. ஒரு மாதத்திற்கும் மேல், இந்த கேபிள் இப்படி ஆபத்தான நிலையில் உள்ளது.இது குறித்து, பகுதி பொறியாளர் உட்பட, மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும், சீரமைப்பு பணிக்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, பகுதிமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இங்கு, மழைக்காலத்தில் மின்கசிவு ஏற்பட்டால், பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.மின் வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள, மின் பகிர்மான உயர் அதிகாரிகள், மேற்கண்ட இடங்களுக்கு நேரில் சென்று, முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


இது குறித்து, மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சேதமடைந்த மின் கம்பங்களை அகற்றுவது, மின் வினியோக பெட்டிகளுக்கு கதவு போடுவது, சாலையில் தெரியும் கேபிளை, பள்ளம் தோண்டி புதைப்பது, அறுந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பிகளை, இழுத்து கட்டுவது உள்ளிட்ட பணிகளை செய்யுமாறு, பொறியாளர்களுக்கு, ஜூலையில் உத்தரவிடப்பட்டது.பல இடங்களில், அந்த பணிகள், மந்த கதியில் நடப்பதாக புகார் எழுந்து உள்ளது.பிரிவு அலுவலக ஊழியர்கள், பொறியாளர்கள், தவறான தகவல்களை தருவதால் தான், சேதமடைந்த சாதனங்கள் குறித்து, 94458 - 50829 என்ற, 'வாட்ஸ் ஆப்' எண் மூலம், புகார் அளிக்கும் வசதி துவக்கப்பட்டுள்ளது.அதற்கான எண்களும், அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், அந்த சேவையை, பலர் பயன்படுத்தவில்லை.தங்கள் பகுதியில், சேதமடைந்த சாதனங்கள் இருந்து, அதை சரிசெய்யுமாறு தகவல் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காத ஊழியர்கள், பொறியாளர்கள் மீது, தலைமை அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம். அதன் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.அதிரடி காட்டுவாரா தலைவர்?மின் வாரிய தலைவர் விக்ரம் கபூர், சென்னை மாநகராட்சியில், மூன்று ஆண்டுகள் வரை, கமிஷனராக பணியாற்றியவர். சென்னையில், இதற்கு முன் நடந்த மின் விபத்துகள் குறித்தும், நன்கு அறிந்தவர். மழைக்காலத்தில், மின் வாரியத்தால் பிரச்னை ஏற்படும் பகுதிகள் குறித்தும் தெரிந்தவர்.இதனால், இந்த விஷயத்தில், மின்வாரிய தலைவர் நேரடியாக களம் இறங்கி, பிரச்னைக்குரிய பகுதிகளில், ஆய்வு செய்ய வேண்டும். இதில், எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், துாங்கி வழியும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, மின் வாரியத்தில், சென்னை மாநகராட்சி பகுதியில் பணிபுரியும் ஒட்டுமொத்த ஊழியர்களையும் விழிப்படைய செய்ய வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


- நமது நிருபர் -

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X