கோத்தகிரி:கோத்தகிரி கேசலாடா கிராம குடியிருப்புக்குள் புகுந்த கரடிகளால் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோத்தகிரி கேசலாடா சாலையில், கேத்ரீன் நீர்வீழ்ச்சி பகுதி அமைந்துள்ளது. தோட்டங்கள் நிறைந்த இச்சாலை வழியாக, நாள்தோறும், நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக, கேசலாடா பள்ளி அருகே, குட்டியுடன் கரடிகள் நடமாடி வருகின்றன.
இதனால், கிராம மக்கள் குறிப்பாக, பள்ளி மாணவ, மாணவியர் அச்சத்திற்கு இடையே, சென்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கிராம குடியிருப்பு பகுதிக்குள் சென்ற கரடிகள், வீதிகளில் சுற்றி திரிந்துள்ளன. வீட்டு வாசலில் இருந்தவர்கள், கதவுகளை பூட்டிவிட்டு, வீட்டிற்குள் தஞ்சமடைந்துள்ளனர்.
நீண்ட நேரமாக வீதிகளில் சுற்றித்திரிந்த கரடிகள், மாலையில் அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து சென்றதை அடுத்து, குடியிருப்பு வாசிகள் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளனர். எனவே, அசம்பாவிதம் நடப்பதற்கு முன், கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.