| சென்னையில் உருவாகும் கட்டடங்களுக்கு...ஆபத்து! சரக்கு லாரிகளில் ஆந்திர கடல் மணல் வரத்து Dinamalar
சென்னையில் உருவாகும் கட்டடங்களுக்கு...ஆபத்து! சரக்கு லாரிகளில் ஆந்திர கடல் மணல் வரத்து
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 செப்
2018
05:51

ஆந்திராவில் இருந்து, சரக்கு லாரிகள் வாயிலாக, கடல் மணல் கடத்தி வரப்பட்டு, சென்னையில் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால், கட்டடங்களின் உறுதி தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, பெண்ணையாறு, ஆரணியாறு, கொசஸ்தலையாறு உள்ளிட்டவற்றில் மணல் குவாரிகள் இயங்கி வந்தன. பல இடங்களில், விதிமீறி, அளவுக்கு அதிகமாக மணல் கொள்ளை அடிக்கப்பட்டது.


இதனால், பல ஆறுகளில், நீரோட்டம் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக, சமூக ஆர்வலர்கள் பலர், வழக்கு தொடர்ந்ததால், இவற்றில் பெரும்பாலான குவாரிகள் மூடப்பட்டுள்ளன.

இதன் எதிரொலியாக, மணல் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால், ஒரு லோடு மணல் விலை, 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.


ஆற்று மணலுக்கு மாற்றாக, 'எம் - சாண்ட்' பயன்படுத்தும்படி, அரசு அறிவுறுத்தியுள்ளது. பெரிய கட்டுமான நிறுவனங்கள் மட்டுமே, எம் - சாண்ட் பயன்படுத்தி வருகின்றன.


சிறிய கட்டடங்கள்

மற்றும் குடியிருப்புகள் கட்டும் பணிகளுக்கு, ஆற்று மணல் தான், அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கிவந்த குவாரிகள் மூலம், சென்னையின் கட்டுமான தேவைக்கான மணல் எடுத்து செல்லப்பட்டது. தற்போது, இம்மாவட்டத்தில் குவாரிகள் எதுவும் இயங்கவில்லை.

இருப்பினும், அரசியல்வாதிகள் துணையுடன், திருட்டுத்தனமாக, குவாரிகளில் மணல் அள்ளப்பட்டு, பெரியபாளையம், செங்குன்றம், காரனோடை உள்ளிட்ட இடங்களில் குவித்து விற்பனை நடக்கிறது.

தற்போது, ஆந்திராவில் இருந்து சரக்கு லாரிகள் மூலம், கடல் மணல் கடத்தி வரப்பட்டு, விற்பனை செய்வது அதிகரித்து உள்ளது. தினமும் காலை, 6:00 மணி முதல், 7:00 மணிக்குள், செங்குன்றம் சோதனை சாவடியை கடந்து, இந்த வாகனங்கள், சென்னைக்கு செல்கின்றன.

சரக்கு லாரிகளில், தார்பாய் போட்டு மூடி எடுத்து செல்வதால், இவை பலருக்கு தெரிவதில்லை. சோதனை சாவடியில் இருக்கும் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார், இந்த வாகனங்களை அடையாளம் கண்டு, விரட்டி பிடித்து, வசூல் செய்கின்றனர்.

சென்னை சென்று சேரும் வரை புழல், மாதவரம், வியாசர்பாடி, பேசின்பாலம், புளியந்தோப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், வசூல் நடக்கிறது.இந்த கடல் மணலை பயன்படுத்தி, தனியார் கட்டுமான பணிகள் மட்டுமின்றி, அரசு கட்டுமான பணிகள் நடந்து வருவதாக தெரிய வந்துள்ளது.இதனால், புதிய கட்டடங்களுக்கு ஆபத்து அதிகரித்துள்ளது. எனவே, ஆந்திராவில் இருந்து வரும் கடல் மணலை தடுப்பதற்கு, உரிய நடவடிக்கைகளை, அரசு எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


என்னென்ன ஆபத்து?


ஆற்றுமணலை விட கடல் மணலில் உப்பு தன்மை அதிகம் இருக்கும். அதை பயன்படுத்தி கட்டடம் கட்டும்போதும், பூச்சுவேலை செய்யும் போதும், ஆரம்பத்தில் எதுவும் தெரியாது.

நாளடைவில், மணல் தனித்தனியாக

பிரிந்து, உதிரும். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, சுவற்றில் ஆணி அடித்தால், அந்த இடத்தில் இருந்து சிமென்ட் பூச்சு மொத்தமாக உதிர்ந்து விழும்.

கட்டடத்திலும் ஆங்காங்கே விரிசல் ஏற்படும். சுவரை லேசாக தட்டினாலே, கற்கள் உடைந்து விழும். மேற்கூரையிலும் இதே பாதிப்பு ஏற்படும்.


- நமது நிருபர் -

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X