| பாலைவனமாகும்! தொண்டாமுத்தூர் ஒன்றியம்  மணல் கடத்தல் அமோகம் Dinamalar
பாலைவனமாகும்! தொண்டாமுத்தூர் ஒன்றியம்  மணல் கடத்தல் அமோகம்
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

11 செப்
2018
23:57

- நமது நிருபர் -

தொண்டாமுத்துார் ஒன்றியம் முழுதும், லாரி லாரியாக மணல், கிராவல் மண் கடத்தப்படுகிறது. 'வருவாய்' பார்க்கும் அரசு அதிகாரிகளால், கடத்தல் தொடர்வதாக, விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர். இயற்கை வளங்கள், நீர் நிலைகளை பாதுகாக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், தொடரும் இந்த மணல் கொள்ளை, அரசு உத்தரவை அசிங்கப்படுத்துவதாக உள்ளது.
கோவை மேற்குத்தொடர்ச்சி மலையில், இரண்டு மாதத்துக்கும் மேலாக பெய்த மழை காரணமாக, மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும், நொய்யல் ஆற்றில் மணல் வளம் அதிகரித்துள்ளது. மணல் கடத்தலில் ஈடுபட்டால், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் என, மாவட்ட நிர்வாகம் கடந்த ஆண்டு எச்சரித்தது.


இது, எச்சரிக்கையோடு நின்றதால், தற்போது நீரோட்டம் உள்ள நிலையிலும், மணல் கடத்தல் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, செம்மேடு, இருட்டுப்பள்ளம், கூடுதுறை, ஆலாந்துறை, தொம்பிலிபாளையம், பள்ளிவாசல் வீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிகரித்துள்ளது.


நொய்யல் துவங்கும் இடமான கூடுதுறை நொய்யல் ஆற்றின் கரையில், மறைவான இடத்தில், 10 அடி ஆழத்துக்கு பெரிய பள்ளம் தோண்டி எடுக்கப்பட்ட மணல், அதே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளது. இதை, இரவு நேரத்தில் மூட்டைகளாக்கி, டூவீலர்களில் கடத்துகின்றனர். வாகனங்கள் சென்று வருவதற்காக, நாணல் அகற்றப்பட்டு பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.


'கிராவல்' மண்


நரசீபுரத்தில் 'கிராவல்' மண் கடத்தப்படுவது குறித்து, கடந்த ஆண்டு, நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. பெரும் பரபரப்பானதால், விசாரணை குழுவெல்லாம் அமைக்கப்பட்டது. அனைத்தும் கண் துடைப்பு என்பது, கடத்தல் தொடர்வதில் இருந்து உறுதியாகிறது.


இதை, ஊர்ஜிதம் செய்யும் வகையில், நரசீபுரம் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தனியார் நிலத்தில், பல ஏக்கர் பரப்பளவில், 'கிராவல்' மண், இரவு பகலாக வெட்டி எடுத்து விற்கப்படுகிறது.


நிலத்துக்குள் டிப்பர் லாரிகள் சென்று வருவதற்காக, மண் வெட்டி எடுக்கப்பட்டு, 'சுரங்கப்பாதை' அமைத்துள்ளனர்.


விவசாயிகள் சிலர் கூறுகையில், 'நொய்யல் ஆறு, நீரோடைகளில் மணல், தனியார் நிலங்களில் கிராவல் மண் தொடர்ந்து கடத்தப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, ஆயிரம் அடிக்கு போர் அமைத்தாலும் நீர் கிடைப்பதில்லை. இயற்கை வளங்கள் தொடர்ந்து கொள்ளையடிப்பதற்கு, 'வருவாய்' பார்க்கும் அதிகாரிகள், உள்ளூர் அரசியல் பிரமுகர்களே காரணம். இதே நிலை நீடித்தால், தொண்டாமுத்துார் ஒன்றியம் பாலைவனமாவது உறுதி' என்றனர்.


பேரூர் தாசில்தார் ராதாகிருஷ்ணன்,''மண் எடுப்பதற்கு யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. நாள்தோறும் ஆய்வு செய்து வருகிறோம்; மணல், மண் கடத்தப்படுவதில்லை.


மண் கடத்தப்படும் போட்டோ இருந்தால் அனுப்புங்கள்; நடவடிக்கை எடுக்கிறேன்,'' என, கூலாக கூறினார்.


'கடும் நடவடிக்கை'


கோவை தெற்கு கோட்டாட்சியர் தனலிங்கம் கூறுகையில்,''மணல் திருட்டில் தொடர்ந்து ஈடுபடுவோர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர். இரவு நேர கண்காணிப்பை தீவிரப்படுத்துகிறோம். நொய்யலில் மணலை யாரும் அள்ளக்கூடாது. அள்ளுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X