| விதை விநாயகர் சிலைக்கு ஆன்லைனில் அமோக வரவேற்பு Dinamalar
விதை விநாயகர் சிலைக்கு ஆன்லைனில் அமோக வரவேற்பு
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
00:04

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த, விதை விநாயகர் சிலை விற்பனை, 'ஆன்லைன்' சந்தையில் கொடிகட்டி பறக்கிறது.


ஆடிப்பெருக்கில் வெள்ளம் ஏற்பட்டு, ஆறுகளில் உள்ள மணல் அடித்துச் செல்லப்படும். இதனால், நீர் கடலில் சென்றடைவதால், நிலத்தடி நீர் குறையும்.ஆற்றில் களிமண் படிந்தால், அந்த மண் ஆற்று நீரை தடுத்து, நிலத்தடி நீரை உயர்த்தும். இதை கருத்தில் கொண்டே, நம் முன்னோர், களிமண்ணில் விநாயகர் சிலை செய்து, வழிபாட்டிற்கு பின், அதை நீர்நிலைகளில் கரைத்தனர்.


மக்கள் ஆர்வம்


எந்த நோக்கத்தில், நம் முன்னோர் விநாயக சதுர்த்தியை கொண்டாடினரோ, அந்த நோக்கம் தற்போது முற்றிலும் மாற்றப்பட்டு விட்டது.மாறிவரும் காலகட்டத்தில், பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து, கவர்ச்சிக்காக, தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் உள்ளிட்ட, பல ரசாயனங்களை சேர்த்து தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை மக்கள் ஆர்வமுடன் வாங்குகின்றனர்.


அவற்றை ஆற்றிலோ, ஏரி, கிணற்றிலோ, கடலிலோ கரைப்பதால், சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்து ஏற்படுகிறது.இந்நிலையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், தமிழகம் முழுவதும், விநாயகர் சிலை தயாரிப்பு பணி விறுவிறுப்படைந்துள்ளது.


வழக்கத்திற்கு மாறாக, இந்தாண்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், விநாயகர் சிலைகளை சிலர் வடிவமைக்க துவங்கி உள்ளனர். களிமண் விநாயகர் சிலைகளும் அதிகளவில் காணப்படுகின்றன.


அவரை விதை


இந்தாண்டு புதுவரவாக, களிமண், இயற்கை உரம் மற்றும் காய்கறி விதைகளை கொண்டு, விதை விநாயகர் சிலைகளை, தனியார் நிறுவன ஊழியர்கள் சிலர் தயாரித்துள்ளனர்.சேலத்தில், இந்த வகை விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆன்லைன் சந்தையில், முன்பதிவு செய்தால், வீட்டிற்கே, இந்த விநாயகர் சிலை அனுப்பி வைக்கப்படுகிறது.சுற்றுச்சூழலுக்கு உகந்த, இந்த விநாயகர் சிலைகளை, தண்ணீரில் கரைத்தால், சில நாட்களில், அதில் உள்ள காய்கறி விதைகள் முளைத்துவிடும்.


இந்த சிலைகளின் நடுப்பகுதியில், முளைப்பு திறன் அதிகம் கொண்ட, அவரை, பீர்க்கன்காய், பீன்ஸ் ஆகியவற்றின் விதைகள் வைக்கப்பட்டுள்ளன.விநாயகர் சதுர்த்தி முடிந்த பின், சிலைகளை மண் நிரப்பிய தொட்டியில் வைத்து, நீர் உற்றி கரைத்து விட்டால், அடுத்த சில நாட்களில், செடி முளைத்துவிடும்.இந்த விநாயகர் சிலைகள், 389 ரூபாய் முதல், 749 ரூபாய் வரை, உயரத்திற்கு ஏற்ப, விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சிலைகளின் எடை, 2 கிலோ வரை உள்ளன.


இந்த புதுமையான முயற்சி, நகரங்களில் போதிய இடவசதி இன்றி, விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் மக்களிடம், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.விநாயகரை கரைப்பதுடன், அதில் இருந்து செடி முளைத்து வரும் போது, மக்கள் மனதில் உற்சாகம் பிறக்கும் என்கிறார், விதை விநாயகர் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர் ஆர்.பாலசந்தர்.


புதிய முயற்சி


இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:பிற மாநிலங்களில், சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளை தயாரிப்பது குறித்து அறிந்தோம். தமிழகத்திலும், அதேபோல செய்ய வேண்டும் என, புதிய முயற்சியில் இறங்கினோம்.விதை விநாயகருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 'அமேசான்' மூலம், பதிவு செய்யும் நபர்களுக்கு, விதை விநாயகரை வீட்டிற்கே அனுப்பி வைக்கிறோம்.இந்தாண்டு இதுவரை, 1,500 விநாயகர் சிலைகள் விற்பனையாகி உள்ளன. அவரை, பீன்ஸ் விதைகள் பெரிதாகவும், முளைப்பு தன்மை அதிகமாகவும் உள்ளதால், அந்த காய்கறி விதைகளை தேர்ந்தெடுத்தோம்.


வருங்கால தலைமுறையை மனதில் கொண்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல், விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.விதை விநாயகர் தொடர்பான விபரங்களுக்கு, 9994810111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X